Home செய்திகள் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக? – சட்டத்தரணி கே.வி.தவராஜா

விக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக? – சட்டத்தரணி கே.வி.தவராஜா

280 Views

“அரசியலை அப்பால் வைத்துவிட்டு விக்கினேஸ்வரனின் கருத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்புக்கு உள்ளது. அவருக்கு ஆதரவாக அல்லது அவரை விமர்சிக்கும் சிங்களத் தரப்பினருக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பது விக்கினேஸ்வரின் செல்வாக்கை அதிகரிப்பதாகவும், அவரது கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமைந்துவிடலாம் என்ற அச்சம் கூட்டமைப்பினருக்கு இருந்திருக்கலாம். அவர்களுடைய மௌனத்துக்கு காரணம் அதுதான்” என்று கூறுகின்றார் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், பிரபல சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா. ‘இலக்கு’ மின்னிதழுக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு;

கேள்வி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.ஏ.சுமந்திரனை முன்னிலைப்படுத்தியமைக்குப் பிரதான காரணம் என்ன?

பதில்: போர் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுதான் தேசியப் பட்டியல் மூலமாக சுமந்திரன் உள்வாங்கப்பட்டார். அதற்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பில் இருந்தார். 2010 தேர்தலின் போது ஏற்பட்ட முரண்பாடுகளால் கஜேந்திரகுமார் வெளியேறினார். அதேகாலப்பகுதியில்தான் சுமந்திரன் உள்வாங்கப்பட்டார். தமிழரசுக் கட்சி, காங்கிரஸ் என்பவற்றைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வருபவர்கள் அனைவரும் சட்டத்தரணிகளாகவே இருந்துள்ளார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றிலும் இதேநிலைமைதான் இருந்தது. மூதூரிலிருந்து எம்.பி.யாக வந்த தங்கத்துரை கூட, பாராளுமன்றத்துக்கு வந்த பின்னர் சட்டத்துறையில் படித்து சட்டத்தரணியானவர். அதாவது, அரசியலில் ஈடுபடுவதற்கு சட்டத்துறை அறிவு அவசியமானதாகக் கருதப்பட்டது. 2010இல் கஜேந்திரகுமார் வெளியேறிய பின்னர் சட்டத்துறை சார்ந்தவர்கள் யாரும் எம்.பி.யாக இல்லை. சம்பந்தன் சட்டத்தரணியாக இருந்தாலும் அவரது வயது போன்றவற்றைப் பார்க்கும் போது அவருக்குச் சிறப்பாகச் செயற்படுவது கடினம்.

இந்த நிலையில்தான் சுமந்திரனுடைய பங்கு முக்கியமானதாகியது. மூன்று மொழிகளும் தெரிந்தவர் என்ற முறையிலும், சட்ட, அரசியலமைப்பு விடயங்களைக் கையாளக் கூடியவர் என்ற முறையிலும் சம்பந்தனும், சுமந்திரனும் மட்டுமே இருந்தார்கள். பாராளுமன்றத்தில் மட்டுமன்றி, வெளியிலும் ஜெனீவா போன்ற விடயங்களைக் கையாள்வது இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள் போன்றவற்றிலும் கட்சிக்கு அவர் தேவையான ஒருவராகவே இருந்தார். சட்டத்துறை, அரசியலமைப்பு விவகாரங்களைக் கையாளக் கூடியவர்களாக வேறு எவரும் இல்லை என்பதாலும், இது போன்ற விடயங்களையிட்டு நுட்பமாக கலந்தாலோசிக்கக்கூடிய வேறு எவரும் இல்லை என்பதாலும் அவரது முக்கியத்துவம் அதிகரித்தது. சம்பந்தனும் அவரும் கலந்துபேசி முடிவுகளை எடுத்தமைக்கும் அதுதான் காரணமாக இருந்துள்ளது.

கேள்வி: பாராளுமன்ற முதல்நாள் அமர்வில் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் நிகழ்த்திய உரை சிங்களத் தரப்பினருடைய கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றது. இது குறித்து தமிழ்க் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?

பதில்: விக்கினேஸ்வரன் கூறிய விடயம் தொடர்பில் மாற்றுக் கருத்து எதற்கும் இடமில்லை. அவர் சொன்ன விடயங்கள் முற்றுமுழுதாக உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேசிய நீக்கம், புலி நீக்க அரசியல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கூட்டமைப்பிலிருந்து தேசியம் குறித்து இதுவரையில் யாரும் பேசியதில்லை.

இவ்வாறான நிலையில் விக்கினேஸ்வரன் பேசியது முக்கியமானது என்பதுடன், முற்றிலும் உண்மை. அவர் சொன்னதில் உண்மை இருக்கின்றதா என்பதைப் பார்ப்பதைவிட்டுவிட்டு, சிங்களத் தரப்பினர் வெறுமனே எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள். விக்கினேஸ்வரனின் உரைக்கு இந்தளவுக்கு எதிர்ப்பு வெளிவந்திருக்கும் நிலையில் கூட, தமிழ் எம்.பி.க்கள் யாரும் அவருக்கு ஆதரவளிக்கவில்லை. மனோ கணேசனுக்கு விக்கினேஸ்வரன் ஆதரவளித்தார். ஆனால், இப்போது விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக மனோ கணேசன் வாய்திறக்கவில்லை. விக்கினேஸ்வரனுக்கு அல்ல – அவரது கருத்துக்கு ஆதரவளிக்க இவர்கள் ஏன் தயங்க வேண்டும்?

துணிந்து அவருக்கு – அவருடைய கருத்துக்கு ஆதரவாக யாரும் பேசாமலிருப்பது உண்மையில் கவலைக்குரிய ஒரு விடயம். தமிழ் மொழி ஒரு ஆதி மொழி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை இந்தியப் பிரதமர் மோடி கூட கூறியிருக்கின்றார். விக்கினேஸ்வரனின் இந்தக் கருத்துக்கு ஆதரவளிக்காவிட்டால் தமிழ்க் கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றம் செல்வதிலும் எந்த அர்த்தமும் இல்லை. பாராளுமன்றத்தில் யார் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்று பார்த்தால், யாரை அதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டும் என தமிழ் மக்கள் வாக்களித்தார்களோ அந்த சஜித் பிரேமதாச அணியினர்தான் இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள். வரப்போகும் மாகாண சபைத் தேர்தலுக்கான அத்திவாரமாகத்தான் அவர்களுடைய இந்தச் செயற்பாடு நோக்கப்படுகின்றது.

கேள்வி: விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக சிங்களத் தரப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்ற நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாக இருப்பது ஏன்?

பதில்: அவர்கள் மௌனமாக இருப்பது கவலைக்குரிய ஒரு விடயம். அரசியலை அப்பால் வைத்துவிட்டு இந்தச் சந்தர்ப்பத்தில் விக்கினேஸ்வரனின் கருத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அவருக்கு ஆதரவாக அல்லது அவரை விமர்சிக்கும் சிங்களத் தரப்பினருக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பது விக்கினேஸ்வரின் செல்வாக்கை அதிகரிப்பதாகவும், அவரது கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமைந்துவிடலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அவர்களுடைய மௌனத்துக்கு காரணம் அதுதான். ஆனால், இது விக்கினேஸ்வரன் அல்ல யார் இந்தக் கருத்தைக் கூறியிருந்தாலும் ஆதரிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்குள்ளது.

கேள்வி: இந்த விடயங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு முக்கியமானது. தாயகத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்கள் விக்கினேஸ்வரின் கருத்தை ஆதரிக்க வேண்டும். விக்கினேஸ்வரனை ஆதரிக்கின்றார்களா இல்லையா என்பது வேறுவிடயம்.

கேள்வி: பொது ஜன முன்னணி அரசின் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளால் 13ஆவது திருத்தம் பலவீனப்படுத்தப்படும் நிலை ஏற்படுமா?

பதில்: உடனடியாக அவர்கள் 20ஆவது திருத்தத்தைத்தான் கொண்டுவரப்போகின்றார்கள். அரசியலமைப்புச் சீர்திருத்தம் எப்போது வரும் என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு கேள்விக்குறியாக உள்ள விடயம். 20 ஆவது திருத்தத்தைச் செய்த பின்னர் அபிவிருத்தி போன்றவற்றில் அரசாங்கத்தின் கவனம் செல்லுமே தவிர, புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதில் அவர்களுடைய கவனம் செல்லும் என நான் கருதவில்லை.

ஏனெனில் அவர்களுக்கு உடனடியாகத் தேவையாக இருப்பது 20 தான். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் – அதன் மூலமாக இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். 20 ஆவது திருத்தம் வந்தபின்னர் அரசாங்கத்தை யாராலும் கேள்விக்கு உட்படுத்த முடியாத ஒரு நிலை ஏற்படும். 18ஆவது திருத்தம் இருந்த போது காணப்பட்ட நிலையைவிட மோசமான ஒரு நிலை ஏற்படும். இந்த அரசாங்கத்தை இவர்கள் சிங்கள – பௌத்த அரசு எனக் கூறுகின்றார்கள்.

ஆனால், உண்மையில் அவ்வாறு கூற முடியாது. இவர்களுக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் மூன்று லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. அதனை அவர்கள் மறந்துவிட முடியாது. 13 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரையில், அது விடுதலைப் புலிகளின் போராட்டத்தினால் கிடைத்த ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது. விடுதலைப் புலிகளையும், போராட்டத்தையும் இவர்கள் இப்போது எந்தளவுக்குத்தான் கொச்சைப்படுத்தினாலும் அவர்களுடைய போராட்டத்தினால்தான் இந்தியா இதனைக் கொண்டுவந்தது.

இது இந்தியாவுடனும் சம்பந்தப்பட்ட ஒன்று. அதனை முற்றுமுழுதாக அரசாங்கத்தினால் இல்லாமல் செய்துவிட முடியாது. 19ஐ நீக்கி 20ஐ கொண்டுவருவதைப் போல 13ஐ இல்லாமல் செய்துவிட முடியாது. ஆனால், 13 சட்டமூலமாகிய பின்னர் ஒருபோதுமே அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், எமது பிரச்சினைகள் பல தீர்க்கப்பட்டிருக்கும். ஒரளவுக்கு யுத்தத்துக்குப் பின்னர் இந்த 11 வருட காலத்தில் 13ஆவது திருத்தம் குறித்து யாரும் பேசவில்லை.

கடந்த நான்கரை வருடகாலத்தில் அரசியலமைப்புப் பேரவை என்றே காலம் சென்றதே தவிர இது குறித்து யாரும் பேசவில்லை. அந்தப் புத்தகம் இப்போது மூடப்பட்டுவிட்டது. இப்போது 13 குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. அரசாங்கத்திலுள்ள சிலர் தமது அரசியல் தேவைகளுக்காக 13 குறித்து இப்போது பேசிக்கொண்டிருக்கின்றார்களே தவிர, அதனை இல்லாதொழிப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதே எனது அபிப்பிராயம்.

கேள்வி: பொது ஜன பெரமுனை அரசாங்கம் இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றது. இந்த நிலையில், அவர்கள் தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருவதற்கான சாத்தியம் உள்ளதா?

பதில்: இவர்களுக்கு என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும், தேசிய இனப் பிரச்சினைக்கு அவர்கள் தீர்வைக்காணத்தான் வேண்டும். காலம் கடந்து போனாலும் பொருளாதாரப் பிரச்சினைகள், உலக நாடுகளின் அழுத்தங்கள் என்பன இவர்களுக்கு அதற்கான நிர்ப்பந்தத்தைக் கொடுக்கும். இங்கு தேசிய இனப் பிரச்சினை ஒன்று உள்ளதென்பது இன்று உலக நாடுகளுக்குத் தெரியும்.

அதனை எவ்வாறு தீர்ப்பது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளதே தவிர, பிரச்சினை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெனீவா போன்ற சர்வதேச அரங்குகளில் இந்தப் பிரச்சினை பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கப்போன்றது. அதனால், சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க சில முயற்சிகள் எடுக்கப்படலாம். ஆனால், அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. அதேவேளையில் காலங்கடத்துவதன் மூலமாக இந்தப் பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்வதற்கு அரசு முற்படலாம். பிரச்சினைக்குக் குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் தீர்க்கப்படவிட்டால், தீர்வு வரும் போது பாதிக்கப்பட்டவர்கள் இருக்கமாட்டார்கள்.

குறிப்பாக, காணாமல் போனோர் விடயத்தை எடுத்துக்கொண்டால், இன்றும் ஒரு பத்துவருடத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடுபவர்களே காணாமல் போய்விடுவார்கள். அரசியல் தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், போரால் ஏற்பட்ட பாதிப்புகள், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த அரசியல் தீர்வும் வரவில்லை. ஏனைய விடயங்களுக்கும் உறுதியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களைத் தவறவிடுவது மிகப்பெரிய குறைபாடாக இருக்கின்றது. 19 ஆவது திருத்தம் அதில் முக்கியமானது. மைத்திரி – ரணில் அரசு பதவிக்கு வந்தவுடன் அவசரமாக அதனைச் செய்தது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நெருக்கமாக இருந்தது. அந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்தையும் கூட்டமைப்பு செய்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைமைப் பதவியும் கிடைத்து, அரசாங்கத்தைப் பாதுபாப்பதற்கான சந்தர்ப்பமும் அரசுக்குக் கிடைத்தது. இவ்வாறான சந்தர்ப்பம் மற்றொரு முறை வரப்போவதில்லை.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version