Tamil News
Home செய்திகள் 3,900 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணி ஆரம்பம்-லிற்றோ நிறுவனம்

3,900 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணி ஆரம்பம்-லிற்றோ நிறுவனம்

கடந்த ஒரு வார காலமாக விடுவிக்கப் படாதிருந்த 3,900 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதனால் தடைப் பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம் இன்று நண்பகல் முதல் ஆரம்பிக்கப்படுமென லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கப்பலுக்கு நேற்று உரிய தொகை வழங்கப்பட்டதால் இன்று முதல் நாடளாவிய ரீதியில் லிற்றோ எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும்  அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக 2.5 மில்லியன் டொலரை செலுத்த முடியாததால் கடந்த ஒருவார காலமாக எரிவாயு தாங்கிய கப்பல் கெரவலப்பிட்டிய – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்தது. உரிய தொகை செலுத்தப்பட்டதால் நேற்று நண்பகல் சமையல் எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெற்றதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலுக்கு தாமதக் கட்டணமாக சுமார் 2 கோடி ரூபா பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த பல மாதங்களாக நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவகின்றனர். அநேக பிரதேசங்களில் எரிவாயு பெற நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

டொலர் நெருக்கடியின் காரணமாக சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை விடுவித்துக் கொள்ள முடியாமையினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிற்றோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பேக்கரி, சிற்றுண்டிசாலைகள்  உள்ளிட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் பல்வேறு சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. நாடளாவிய ரீதியிலுள்ள அநேக உணவகங்கள்  மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான விபரம் லிற்றோ இணையத்தில் பதிவேற்றப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version