Home ஆய்வுகள் உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா? | வேல் தர்மா

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா? | வேல் தர்மா

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?

வேல் தர்மா

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளி நாடுகளும் இரசியாவை ஊதாசீனம் செய்து மேற்கொண்ட அரசுறவியல் நகர்வுகள் போல் இனியும் செய்ய முடியாது என்பதை சிரியாவில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் 2015இல் அழுத்தமாக தெரிவித்திருந்தார். இரசியாவும் உலக விவகாரங்களில் ஒரு பங்காளியாக இருக்க வேண்டும் என்பதையும் இரசியாவிற்கு என ஒரு கவசப் பிராந்தியம் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் விதமாக இரசியா 2014 உக்ரேனை ஆக்கிரமித்தமையும், 2021இல் உக்ரேன் எல்லையில் உக்ரேனுக்கு பெரும் அச்சுறுத்தல் விடுவிக்கக் கூடிய வகையில் எல்லையில் பெருமளவு இரசியப் படையினரைக் குவித்தமையும் எடுத்துக் காட்டுகின்றன.

இரசியாவிற்கு தேவையான உக்ரேன்

2000-ம் ஆண்டே இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறையை ஈடு இணையற்றதாக மேம்படுத்தும் இருபது ஆண்டு திட்டத்தை வகுத்திருந்தார். அத்திட்டம் 2020இல் நிறைவேற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் போல் மீளவும் ஒரு வலிமை மிக்க நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கும் முகமாக 2021 மார்ச் மாதம் உக்ரேனிய எல்லையில் இரசியப்படைகள் குவிப்பது ஆரம்பமானது. 2021இறுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இரசியப் படையினரை உக்ரேன் எல்லையில் குவித்த பின்னர் புட்டீன் ஒரு உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாகத் தயார் செய்து, அதில் மேற்கு நாடுகள் கையொப்பமிட வேண்டும் என வேண்டினார். அதன் முக்கிய அம்சம் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்க மாட்டோம் என்ற உறுதி மொழி அமைந்துள்ளது. உக்ரேனும் நேட்டோவில் இணைவது இரசியவின் பிராந்திய ஆதிக்கத்திற்கு சவாலாக அமையும்.

நேட்டோ படை நகர்வுகள்

போல்ரிக் நாடுகளுக்கு ஐம்பதினாயிரம் அமெரிக்கப் படையினரை அனுப்பலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே அறுபதினாயிரம் அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளனர். USS Harry S Truman என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் படையணி உக்ரேனைப் பாதுகாக்க தயார் நிலையில் உள்ளது. டென்மார்க் இரசிய எல்லை நாடான லித்துவேனியாவிற்கு தனது விமானப்படையையும் கருங்கடலுக்கு தன் கரைசார் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியுள்ளது. உக்ரேன் எல்லையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இரசியாவின் வருமானத்தில் பெரும்பகுதி எரிபொருள் ஏற்றுமதியால் கிடைப்பதால், எரிபொருள் விலை ஏறுவதையிட்டும் புட்டீன் மகிழ்ச்சியடைவார்.

ஜேர்மனியின் எரிவாயுத் தேவையில் அரைப்பங்கு இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. உக்ரேன் விவகாரத்தில் இரசியாவுடனான ஒரு முறுகலை ஜேர்மனி விரும்பவில்லை என்ற நிலை புட்டீனுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இரசிய விமானங்கள் உக்ரேனுக்கு மேலாகப் பறக்கும் போது அவற்றை குழப்பக் கூடிய வகையில் நேட்டோ உறுப்பு நாடுகளின் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டில் இருந்து உக்ரேனின் கிழக்குப் பகுதியில் வாழும் இரசியர்கள் ஒரு பிரிவினைப் போரை இரசியாவின் உதவியுடன் செய்து கொண்டிருக்கின்றனர். ஏழாண்டுகளுக்கு மேலாக அவர்களுடன் செய்து கொண்டிருக்கும் போர் உக்ரேனியப் படையினருக்கு ஒரு சிறந்த போர்முனை அனுபவத்தை கொடுத்துள்ளது.

இரசிய முற்றுகை

உக்ரேனை அதன் வடக்கு கிழக்கு மேற்கு ஆகிய திசைகளில் இருந்து ஆக்கிரமிப்பு நகர்வுகளைச் செய்யக் கூடிய வகையில் இரசிய படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். உக்ரேனின் கிழக்குப் பகுதி இரசியாவுடன் எல்லையைக் கொண்டது. 2014இல் இருந்தே அங்கு இரசியப் படைகள் நிலை கொண்டுள்ளன. உக்ரேனின் வடக்குப்பகுதி இரசியாவுடனும் இரசியாவின் செய்மதி நாடான பெலரஸுடனும் எல்லையைக் கொண்டது. 2022இன் ஆரம்பத்தில் பெலரஸில் இரசியா தனது படையினரையும் தனது பெருமைக்குரிய எஸ்-400 என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் நிறுத்தியுள்ளது. உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிமியாவை 2014இல் இரசியா தன்னுடன் இணைத்துள்ளது. அது இரசியக் கடற்படையின் இதய நிலமாக இருக்கின்றது. அதையொட்டிய கருங்கடல் பிரதேசத்தில் இரசியாவின் கடற்படை குவிக்கப்பட்டுள்ளது. இரசியாவின் மேற்கு எல்லையில் உள்ள மொல்டோவாவும் இரசியாவுடன் சிறந்த உறவைப் பேணுகின்றது. ஹங்கேரி, ருமேனியா, செலோவாக்கியா, போலாந்து ஆகிய நேட்டோ உறுப்புரிமை பெற்ற நாடுகளும் உக்ரேனுடன் எல்லையைக் கொண்டுள்ளன.

சமச்சீரற்ற போர்

குடிப்படையினர் (Militias) கைகளில் படைக்கலன்களை கொடுக்கும் சட்டத்தை 2020இன் இறுதியில் உக்ரேன் நிறைவேற்றி யிருந்தது. அதன் மூலம் இரசியாவிற்கு எதிராக 130,000 மேலதிகப் படையினரைக் களத்தில் இறக்கக் கூடிய நிலையில் உக்ரேன் இருக்கின்றது. உக்ரேன் அதிபர் விளோடிமீர் ஜெலென்ஸ்கி இரசியப் படையினர் உக்ரேனை ஆக்கிரமித்தால் அவர்களுக்கு எதிர்பாராததும் இரசிய மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவினதுமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் திட்டத்துடன் இருக்கின்றார். அமெரிக்காவின் திட்டம் இரசியப் படையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதுடன், பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் திட்டத்துடன் இருக்கின்றது. உக்ரேனின் திட்டம் ஆக்கிரமிக்கும் இரசியப் படையினருக்கு எதிராக ஒரு கரந்தடிப் போரை நடத்துவதாக இருக்கலாம். ஒரு மரபுவழிப் பயிற்ச்சி பெற்ற படையணி தன கனரக படைக்கலன்களுடன் கரந்தடிப் போர் செய்யும் போது இழப்பு மோசமானதாக அமையலாம். நாற்பது மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டைக் கைப்பற்ற ஒரு இலட்சம் படையினர் போதாது என்பது படைத்துறை நிபுணர்களின் கணிப்பீடாக இருக்கின்றது.

பொருளாதாரத் தடை – SWIFT

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் மேலதிக பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் செய்யலாம். குறிப்பாக பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான Society for Worldwide Financial Telecommunication (SWIFT) இல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFT இல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்சியில் அமெரிக்கா இணங்கலாம்.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரன் ஜேர்மனி, இரசியா, உக்ரேன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பரிசில் ஒரு பேச்சு வார்த்தையை நடத்தினார். டிசம்பர் 7 மற்றும் 30-ம் திகதிகளில் அமெரிக்க அதிபர் பைடனும் இரசிய அதிபர் புட்டீனும் இணையவெளியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. புட்டீன் பகிரங்கமாகச் செய்த படைநகர்வுகள் அவருக்கு ஒரு சாதகமான விளைவை ஏற்படுத்தியதாக இரசியர்களுக்கு அவர் காட்டியே ஆகவேண்டும். உக்ரேனை ஆக்கிரமித்தால் புட்டீனுக்கு உள்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பக் கூடிய வகையில் அவரது படையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த நேட்டோப் படையினர் தயாராக உள்ளனர். அமெரிக்கப் படையினர் நேரடியாக இரசியப் படையினருடன் மோதுவதைத் தவிர்ப்பார்கள். மாறாக போலாந்து, துருக்கி போன்ற நாடுகள் தம் படையினரை உக்ரேனுக்கு மறைமுகமாக அனுப்பும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. 1986-இல் உக்ரேனில் அணு உலை விபத்து நடந்த இடமாகிய செர்னோபிலையாவது இரசியப் படையினர் கைப்பற்றி தாம் வெற்றி பெற்றதாக பரப்புரை செய்யலாம்.

Exit mobile version