Home காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் “எங்கடை கடைசி வாழ்க்கை நேரமாவது என்ரை பிள்ளைகூட இருக்கணும்.” காத்திருக்கும் பெற்றோர் | பாலநாதன் சதீஸ்

“எங்கடை கடைசி வாழ்க்கை நேரமாவது என்ரை பிள்ளைகூட இருக்கணும்.” காத்திருக்கும் பெற்றோர் | பாலநாதன் சதீஸ்

434 Views

பாலநாதன் சதீஸ்

காத்திருக்கும் பெற்றோர்: என் மகன் எங்கே? என் மகள் எங்கே? எனது கணவன் எங்கே?  என் அப்பா எங்கே? என  எத்தனையோ உறவுகள் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்  தம் உறவுகளுக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கான நீதி பல தசாப்தங்களைக் கடந்தும் இதுவரை எட்டப்படவில்லை. தம் உறவுகளைத் தொலைத்துவிட்டு, அவர்களின் வரவுக்காய் காத்திருக்கும் காணாமலாக்கப் பட்டவர்களுக்கான நீதி கிட்டுமா? அல்லது இன்னும் பல தசாப்தங்கள் வீதியிலே போராடும் அவல நிலைதானா?

கடந்த யுத்தத்தில்  கடத்தப்பட்டும், காணாமலாக்கப் பட்டும், சரணடைந்தும் காணாமல் போன  பல தமிழ் உறவுகளின் சொந்தங்கள், வடக்கு கிழக்கில் போராட்டப் பந்தல்கள் அமைத்தும், தீச்சட்டி ஏந்தியும் பல வழிகளில் தம் சொந்தங்களை மீட்டுவிட வேண்டும் எனப் போராடி வருகின்றனர். அவ்வாறு போரிலே ஒரு மகனை இழந்து விட்டு, மற்றைய மகனைக் காணவில்லை எனத் தேடியலையும்  ஒரு பெற்றோரின் நிலையை  இங்கு  பதிவிடுகின்றேன். அவர்களின் கூற்று:

“எனது பெயர் ஜேசுராசா ஜெயசீலி,  எனது கணவர் பெயர்  சூசைப்பிள்ளை ஜேசுராசா. நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்திலே வாழ்ந்து வருகின்றோம்.  எனது மூத்த மகன் ஜேசுராசா ஞானசெபஸ்ரியன்.  இவர் கடந்த 2009.04.20 அன்று நாட்டுக்காகப் போராடி வீரச்சாவடைந்துள்ளார்.  எனது மற்றைய மகன் ஜேசுராசா ஞானஸ்ரிபன். இவரைத் தான் காணவில்லை. இறுதி யுத்தநேரம் மாத்தளன் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டார். இவரை  அன்று பிடித்துக்கொண்டு போன பிறகு,  2009.05.17  இராணுவம் வாகனத்தில் கொண்டு போகும் போது,  மகனின் நண்பர் ஒருவர் ஓமந்தை பகுதியில் வைத்து கண்டதாக எமக்கு கூறினார்.

யுத்த நேரம். எல்லாரும் பாதுகாப்புத் தேடி ஒடினதால், மகனைத் தேடமுடியவில்லை. நாங்கள் 2009.04.20 அன்று  ஆனந்தபுரம், பொக்கணை, மாத்தளன் ஊடாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போனாங்கள்.  அங்கிருந்து பேருந்தில் ஏற்றி 25 ஏக்கர் பகுதியில் போன மக்களை  7 நாட்கள் வைத்திருந்து, பிறகு அங்கிருந்து வவுனியா செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் எங்களைக்  கொண்டு போய் விட்டார்கள்.

முகாமில் இருந்து 2012.03.12 அன்று ஆனந்தபுரத்திற்கு எங்களை மீள்குடியமர்தினவை.  இப்ப எங்கட சொந்த இடத்தில் தான் இருக்கிறம்.  எங்களுக்கு 5 பிள்ளைகள்.  மூத்தவர் மாவீரர்.

மூன்றாவது மகன் காணாமல் போனவர். ஏனையவர்கள் திருமணம் செய்திட்டார்கள். இப்ப நாங்கள் தனியாகத்தான் இருக்கிறம். எங்கடை பிள்ளையை எங்களால் முடிஞ்ச அளவு தேடிட்டம்.  ஆனால் கிடைக்கலை. என்ரை  பிள்ளை காணாமல் போகேக்க 17 வயது.  எந்தக் குற்றமும் புரியாத அப்பாவி. இப்போது அவனுக்கு 30 வயது 13 வருசமாகிட்டுது. ஆனாலும் என்ரை பிள்ளைக்கு எங்கே என்ன நடந்தது என்று தெரியலை.  இப்போ இருக்கிறனா இல்லையா எண்டு கூடத் தெரியலை.

என்ரை  பிள்ளையக்  கண்டுபிடிச்சுத் தரசொல்லி ரெட் குறோஸ் நிறுவனம், ஜனாதிபதி ஆணைக்குழு, வன்னிப் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் வவுனியா என எல்லா இடமும் முறைப்பாடு செய்தனாங்கள்.  எல்லாரும் பிள்ளையைக் கண்டுபிடிச்சுத் தாறதாச் சொன்னவை. ஆனால் இதுவரை என்ரை பிள்ளையைப் பற்றி எந்தத்  தகவலும் இல்லை.

2013 ஆம் ஆண்டு பாதராக்கள் பிள்ளைகளைத் தேடி பார்ப்பதற்காக எங்களைக்  கூட்டிக்கொண்டு  போனவை. அப்போது வவுனியாவில் பொலிஸாரால் எங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.  அங்கு யாரும் இல்லை என  எங்களை மிரட்டித் திருப்பி அனுப்பினார்கள்.

என்ரை பிள்ளையைத் தேடி முல்லைத்தீவில் காணாமல் போன உறவினர்களால் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலிற்குப்  போய் ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கு கொள்கிறனான். கணவரும் இடைக்கிடை எனக்கு போகமுடியாத  சந்தர்ப்பங்களில் அவர் போறவர்.  இப்போ இரண்டு பேருக்கும் வயது போயிட்டுது. எங்களால்  ஏலாது. 13 வருசமா தேடிக் களைச்சுப் போனம். எப்பிடியாவது என்ரை பிள்ளையை மீட்டிடுவம் எண்டு போராடினம். ஆனால் மீட்கமுடியலை.

இப்பவும் மகனைப் பற்றிப் புலனாய்வுத் துறையினர் விசாரிக்கிறவை. திருமணம் முடித்த மகன் ஒருவர் உடையார்கட்டில் இருக்கிறார். அவருக்குத் தொலைபேசி அழைப்பை எடுத்து 24.01.2022 அன்றும் விசாரித்திருக்கிறார்கள்.

புலனாய்வுத் துறையினர்  எல்லாரும் விசாரிக்கினம். பிள்ளையைப் பற்றி மட்டும் ஒரு தகவலும் இல்லை.  என்ரை பிள்ளையை எப்பிடியாவது மீட்டுத் தாங்கோ? எங்கடை  கடைசி வாழ்கை நேரமாவது என்ரை பிள்ளைகூட இருக்கணும்.  அதுதான் எங்கடை கடைசி ஆசை. ” என்று தங்கள் ஆதங்கத்தை அந்தத் தாய் கூறிமுடித்தார்.

யுத்தம் முடிவடைந்து பல தசாப்தங்களையும் கடந்த நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. எத்தனை வருடங்களாக காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது.  எல்லோராலும் வாய் வார்த்தையாக பேசப்படுகின்றதே தவிர, அவர்களுக்கான நியாயமான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

காணாமலாக்கப் பட்டவர்களுக்கான தீர்வுகள் எப்போது வழங்கப்படும். அவர்களுக்கான நியாயமான தீர்வுகளை வழங்கினாலாவது உறவுகளைத் தொலைத்த சொந்தங்கள் தமது கடைசி காலத்திலாவது நிம்மதியாக வாழக் கூடும். ஆனால் அவர்களுக்கான சரியான தீர்வு வழங்காமல் வீதிகளிலே அல்லல்பட வைப்பது சரிதானா?  இதற்கு அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தான் விடை கூற வேண்டும்.

1 COMMENT

  1. […] காத்திருக்கும் பெற்றோர்: என் மகன் எங்கே? என் மகள் எங்கே? எனது கணவன் எங்கே? என் அப்பா எங்கே? என எத்தனையோ உறவுகள் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் தம்மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-167-january-29/ https://www.ilakku.org/  […]

Leave a Reply

Exit mobile version