Home ஆய்வுகள் ராஜபக்சக்களை தோற்கடிக்க வல்ல எதிரணி தலைவர் யார்? | அகிலன்

ராஜபக்சக்களை தோற்கடிக்க வல்ல எதிரணி தலைவர் யார்? | அகிலன்

 

எதிரணி தலைவர் யார்

அகிலன்

ராஜபக்சக்களை தோற்கடிக்க வல்ல எதிரணி தலைவர் யார்? இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கின்ற போதிலும் ராஜபக்சக்களைத் தோற்கடிப்பதற்கு வல்லமையடைய தலைவர் யார் என்பதை எதிரணியினர் தேடத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக மூவர் இதற்கான தகுதி தமக்கு இருப்பதாகக் கூறிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். அதில் இருவருடைய அரசியல் செயற்பாடுகள்  தீவிரமடைந் திருப்பதை கடந்த சில வாரங்களில் அவதானிக்க முடிந்தது.

”எதிர்க்கட்சித் தலைவர் நான்தான்! அதனால் பிரதான எதிரணி வேட்பாளராக நானே களமிறங்குவேன்” என அமைதியாக இருக்கும் நிலையில் சஜித் பிரேமதாச இல்லை. எதிரணியின் சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கியதால் ரணில் விக்கிரமசிங்க இரு தடவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாத நிலை எற்பட்டது சஜித்துக்கும் ஒரு பாடம். அதனால் சஜித் முகாம் துரிதமாகச் செயற்படத் தொடங்கி விட்டது.

அதே வேளையில் பொது வேட்பானர் என்ற கருத்தும் இப்போது மீண்டும் முன்வைக்கப்பட்டு, இரண்டு பெயர்களும் பேசப்படுவதால், தொடர்ந்தும் அமைதியாக இருக்க முடியாத நிலையில்தான் சஜித்தின் செயற்பாடுகளும் வேகமெடுத்திருக்கிறன, அவரது ஊடகப் பிரிவும் முடுக்கிவிடப்பட்டுள்ளது, தினசரி பொது மக்களை சந்திக்கும் சஜித், அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய தகுதி தமக்கு மட்டுமே இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றார்.

ராஜபக்சக்கள் அமைதியாகத்தான் இருக்கின்றார்கள். கோட்டாபய மீண்டும் ஒரு முறை களத்தில் இறங்குவதற்கான வாய்ப்புக்கள் தாராளமாக உள்ளன. இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றும் விருப்பம் அவருக்கு நிச்சயமாக இருக்கும். அதனை அவர் மறைமுகமாகச் சொல்லியுமுள்ளார். அவர் இறங்கா விட்டாலும், அந்தப் பதவியில் கண்வைத்துள்ள மற்றொரு ராஜபக்ச களமிறங்கலாம். அது நாமலாக இருக்கலாம் அல்லது பஸிலாக இருக்கலாம்.

ஆனால், பிரச்சினை இப்போது அதுவல்ல. களமிறங்கப் போகும் ராஜபக்சவை எதிர் கொள்ளக் கூடிய வல்லமை உள்ள எதிரணி வேட்பாளர் யார் என்ற கேள்விதான் இப்போது எழுப்பப் பட்டிருக்கின்றது.

முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை களமிறக்கும் முயற்சியில் சந்திரிகா குமாரதுங்க காய்களை நகர்த்தியிருக்கின்றார்.

அது ஒருபுறம் இருக்க, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும், ராஜபக்சவை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை தனக்கு மட்டும்தான் உள்ளது எனக் காட்டிக் கொண்டு இப்போதே திட்டமிட்ட முறையில் தனது நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றார். சஜித்தின் இந்த அவசரத்துக்கு ராஜபக்சக்கள் காரணமல்ல. எதிரணியிலிருந்து மற்றொருவரை களத்தில் இறக்குவதற்கான முயற்சிகள் தன்னையும் மீறிச் சென்றுவிடலாம் என்ற அச்சம்தான் அவரை ஆட்கொண்டிருக்கின்றது.

எதிரணி தரப்பில் மற்றொருவரும் களமிறக்கப்பட்டால், ராஜபக்சக்களுக்கு எதிரான வாக்குகள் பிளவுபட்டு ராஜபக்சக்களுக்கு வெற்றி உறுதியாகிவிடும் என்பது சஜித்துக்கு உறைக்கிறது.  சஜித்தின் கனவுக்கு இன்று ஆப்பு வைக்கக்கூடியவர்களாக இருப்பவர்கள் இருவர். ஒருவர் சிரானி பண்டாரநாயக்க. மற்றவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க.

சம்பிக்க ரணவக்க ஒரு பொறியியலாளர். ஜாதிக ஹெல உருமய என்ற சிங்கள தேசியவாதக் கட்சியின் முக்கிய தலைவர் களில் ஒருவராக இருந்தவர். சிங்கள – பௌத்த தேசியவாதத்தை முன்னிலைப் படுத்தி, அரசியலில் முன்னுக்கு வந்தவர். பின்னர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, 43 ஆவது படையணி என்ற அமைப்பை உருவாக்கியவர். ஐ.தே.க.விலிருந்து வெளியேறிய சஜித் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கிய போது சம்பிக்கவும் அதில் இணைந்து கொண்டார்.

சம்பிக்கவுக்கு இருக்கக் கூடிய பௌத்த – சிங்கள ஆதரவுத் தளமும், அவரது ஆளுமையும் சஜித்துக்கு அச்சுறுத்தலாகத் தான் இருந்தது. கட்சியில் முக்கிய பதவிகள் எதனையும் சம்பிக்கவுக்குக் கொடுக்காமல் பாதுகாத்துக்கொள்வதில் சஜித் எப்போதும் அவதானமாகவே இருந்தார்.

ராஜபக்சக்களை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை தனக்கு மட்டுமே இருப்பதாக சம்பிக்க கருதுவதற்கு சில காரணங்கள் உள்ளன. ஜாதிக ஹெல உருமயவின் முக்கியமான ஒருவராக இருந்தவர் என்ற முறையில் சிங்கள – பௌத்த கடும் போக்களாளர்களின் வாக்குகளைக் கவரக் கூடிய ஒருவராக அவர் இருப்பது முதலாவது காரணம். அதாவது, ராஜபக்சக்களுக்கு இருக்கக் கூடிய சிங்கள தேசியவாத வாக்குகளை பிளவுபடுத்த தம்மால் மட்டும்தான் முடியம் என அவர் நினைக்கிறார்.

ஒரு புத்திஜீவி என்ற தோற்றத்தையும் அவர் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். அத்துடன் அவர் உருவாக்கிய 43 ஆவது படையணி என்ற அமைப்பும் ஒருவகையில் புத்திஜீவிகளைக் கொண்டதாகவே உள்ளது. இலங்கையில் இலவசக்கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது 43 ஆம் ஆண்டில்தான். அதனைக் குறிக்கும் முகமாகவே அந்தப் பெயரை அவர் தெரிவு செய்தார்.

கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் வியத்மக, எலிய என்ற அமைப்புக்களை உருவாக்கினார். சிங்கள தேசியவாதிகள் மற்றும் புத்திஜீவிகளை உள்ளடக்கியதே இந்த அமைப்புக்கள். அவற்றின் மூலமாகவே ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நிலைநிறுத்த அவர் முயன்றார். அதேபோன்ற ஒரு காய்நகர்தலாகவே 43 ஆவது படையணியை சம்பிக்க உருவாக்கினார்.

கடந்த வருடம் நடைபெற்ற அவரது அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் 4 மொழிகளில் அவரது விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்பவற்றுடன் பிரெய்ல் மொழியிலும் அதனை அவர் வெளியிட்டார். இலங்கையில் பிரெயல் மொழியில் ஒரு அரசியல் மக்கள் அமைப்பு விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருப்பது இதுதான் முதல்தடவை. இதன்மூலமாக இலங்கையில் இருக்கக் கூடிய கண்பார்வை யற்றவர்களின் குடும்பங்களின் ஆதரவை அறுவடை செய்ய அவர் முற்படுகின்றார்.

அதே வேளையில், வெறுமனே இனவாதத்தை மட்டும் முதலீடாகக் கொள்ளாமல் சிறுபான்மையினரின் ஆதரவை வெல்வதற்கும் அவர் முற்பட்டிருக்கின்றார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த அவர் தமிழ் மக்களின் உணர்வுகளை நாடி பிடித்துப்பார்த்தார்.

கடந்த சனிக்கிழமை 43 படையிணியின் மாநாடு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. அனைத்து அரசியல் கட்சிகள், எம்.பி.க்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது. ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நிலை நிறுத்துவதற்கான முயற்சி யாகவே இந்த மாநாட்டை சம்பிக்க பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்.

தமது கட்சியைச் சேர்ந்தவர்களை அதற்குச் செல்வதைத் தடைசெய்த சஜித், கட்சி சார்பில் ஒருவரை மட்டுமே பின்னர் அனுமதித்தார். சஜித்தும் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்தார்.

அதேவேளையில், ஐமச எம்.பி.யான மனோ கணேசன் இதில் கலந்துகொண்டிருந்தார். மாநாட்டின் முடிவில் மனோ தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. என்ன நடைபெறுகின்றது என்பதையும் அம்பலமாக்கியது.

‘இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது. ஆகவே புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43ம் படையணி தலைவர் பட்டாலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும்.

மனோ கணேசனின் இந்தக் கருத்து எதிரணிக்குள் தீவிரமடைந்திருக்கும் நெருக்கடியை வெளிப்படுத்துகின்றது.

இதே வேளையில், தன்னுடைய நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதை சஜித்தும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

“அடுத்த தடவை ராஜபக்சக்களில் ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்கினாலும் நான் தோற்கடித்தே தீருவேன்”  சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கிறார்.

சம்பிக்க ரணவக்க 43ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கி அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்துச் செயற்படுகின்றார் என அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுவது தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் ஊடகங்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“சம்பிக்க ரணவக்கவின் உண்மையான திட்டம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் நான்தான் எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர். கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணிகளுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் எனக்கான வாக்குகள் சிதறின. இதனால் கோட்டாபய ராஜபக்ச வெற்றிவாகை சூடினார். அடுத்த தடவை கோட்டாபய ராஜபக்சவோ அல்லது வேறெந்த ராஜபக்சவோ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் வீழ்த்தியே தீருவேன். நாட்டு மக்கள் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கமே உள்ளனர். அவர்கள் நாட்டுக்கான புதிய தலைவரைத் தேடுகின்றனர்” என சஜித் கூறியிருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வர இன்னும் 3 வருடங்கள் உள்ளன. அனால், எதிரணிக்குள் இப்போதே தயாரிப்புக்கள் ஆரம்பமாகி விட்டன.

Exit mobile version