Home ஆய்வுகள் ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து...

ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும்

நாம் ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும். இந்த கொள்கையை தமிழ் இனம் கடைப்பிடித்தாலே ஒற்றுமை அற்ற இனம் என பகைவர்களின் மனங்களிலும் படிந்துள்ள ஏளனத்தையும் போக்க முடியும்.

உலகிலும் சரி, இலங்கையிலும் சரி மாற்றங்கள் விரைவாக இடம்பெற்று வருகின்றன. இந்தியாவை கைவிட்டு, அவுஸ்திரேலியாவின் பக்கம் தாவிய அமெரிக்கா ஒருபுறம் இருக்க, தனது நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்காகப் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் இலங்கை அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்ச.

இதில் வேடிக்கை என்னவெனில், அவரால் அழைப்பு விடுக்கப்பட்ட புலம்பெயர் சமூகத்தின் பல அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் அண்மையில் அவரது அரசினால் தடை செய்யப்பட்டவர்கள். கடந்த வாரம் ஆற்றிய தனது உரையில் மிச்செல் பச்சிலெட் அம்மையாரும் அதனைக் குறிப்பிட்டிருந்தார். 300 இற்கு மேற்பட்ட அமைப்புக்களும், தனிநபர்களும் அதில் இந்த தடைப்பட்டியலில் அடக்கம்.

உலகம் எதிர்கொள்ளும் பூகோள அரசியல் மாற்றங்கள், அதனால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், கோவிட்-19 நெருக்கடியும் அதனால் உலகில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் உலகின் தற்போதைய ஒழுங்கை மாற்றி அமைக்கப் போவதையே அண்மைக்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்ச கலந்துகொண்டு, நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான மார்க்கத்தைத் தேடும் அதேசமயம், ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டமானது இலங்கை அரசின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யவில்லை.

உலக நாடுகளைக் குறிப்பாக மேற்குலக நாடுகளை சமாளிப்பதற்காக அவசரமாக நியமனம் பெற்ற புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரீஸ் வரைந்த 14 பக்க அறிக்கையும், மிச்செல் பச்சிலெட் இன் அறிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கடந்த 13 ஆம் நாள் ஆரம்பமாகிய கூட்டத்தொடரில் அவர் ஆற்றிய உரை என்பது மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பாகவே அமைந்திருந்தது. எனவே அதில் நாம் அதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எதிர்பார்க்க முடியாது.

எனினும் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் அதில் முன்னிறுத்தப்படவில்லை என்ற விமர்சனங்களும் உண்டு. ஆனால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் தொடர்பில் எத்தனை ஆவணங்கள் கடந்த ஆறு மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்வியும் இங்கு உள்ளது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னராக தமிழ் கட்சிகள் அனுப்பும் கடிதங்களால் அறிக்கையில் மாற்றம் வரப்போவதில்லை. ஏனெனில், இவர்களின் சண்டை முடிந்து கடிதம் செல்வதற்கு இடையில் அங்கு உரை தயாராகிவிடும்.

எனினும் தற்போதைய உரையில் குறிப்பிடத்தக்க முக்கிய விடயங்களாக இலங்கை அரச தலைவர் அமைத்த விசாரணைக்குழுவின் அறிக்கையானது இந்த வருட இறுதிக்குள் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்பதும், காணாமல்போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும் மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும், சாட்சியங்களை சேகரித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு குழு ஒன்று அமைக்கப்படுவது மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது தொடர்பான தகவல்கள் முக்கியமானவை.

ஐக்கிய நாடுகள் சபை தன்வசம் வைத்துள்ள 120000 இற்கு மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களையும், இந்த வருடம் சேகரிக்கப்படும் மேலதிக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களையும் அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உரையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பது மேற்குலகத்தின் நலன்சார்ந்தது என்றபோதும், அவர்களின் நடவடிக்கைககளில் பங்கெடுத்து அதனை எமக்கு சார்பானதாக மாற்றவேண்டிய தேவை ஒன்று எமக்குள்ளது. அதாவது கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தும் பொறிமுறை.

46/1 தீர்மானம் வந்தபோது அதனை விமர்சித்தவர்கள் கடந்த 6 மாதங்களில் எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது தொடர்பில் யாருக்கும் எதுவும் தெரியாது, சில சமயங்களில் அவர்கள் தற்போதைய உரையையும் விமர்சித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் தனது கடந்த 6 மாதகால செயற்பாட்டை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

அதில் எவ்வாறு பங்கெடுப்பது மற்றும் அதனை எவ்வாறு எமது நலன்சார்ந்து பயன்படுத்துவது என்பது தொடர்பில் தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டும்.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் நீதிக்கும் உண்மைக்குமான அனைத்துலக செயற்திட்ட அமைப்பு தகவல்களை ஆவணப்படுத்திவரும் அதேசமயம், அதனுடன் இணைந்து தமிழ் செயற்பாட்டாளர்களும் இயங்குவது ஒரு காத்திரமான மாற்றமாகும். இதுவரை 488 பேரின் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 463 பேர் பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள்.

அதேசமயம், கடந்த 6 மாதங்களில் இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் அமைப்புக்களினால் வழங்கப்பட்ட ஆவணம் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபை தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சித்தாலும், அதனையும் தாண்டி ஏனைய அமைப்புக்கள் செயற்பாடுகளில் இறங்கியிருப்பது என்பது வரவேற்கத்தக்கதே. எனவே ஐ.நாவின் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையில் தமிழ் மக்கள் தம்மை அதிகம் இணைத்துக் கொள்வது என்பது அவசியமானது.

எனினும் ஒரு புறம் புலம்பெயர் அமைப்புக்களுடன், பேச்சுக்களை நடத்துவதாக கூறிக்கொண்டு மறுபுறம் தியாகி திலீபனிற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனை இலங்கை காவல்துறை அடிப்படை உரிமைகளையும் மதிக்காது கைது செய்தது என்பது இலங்கை அரசின் கபடத்தனத்தை தான் காண்பிக்கின்றது.

நினைவாலயங்களில் மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுக்க முடியாது என்பது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது தீர்மானத்தின் ஒரு சரத்து என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

எனவே தனது பொருளாதாரத்தை மீட்கவும், அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து தப்பவும் இலங்கை அரச தலைவர் எடுக்கும் முயற்சிகளை ஒன்றாக இணைந்து முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகின்றது.

சீனாவை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஸ்லோவேனியா பிரதமர் ஜான்ஸ் ஜன்சா அவர்கள் தெரிவித்த கருத்து ஒன்றை இங்கு தருகிறேன் அது எமக்கும் பொருத்தமானதே.

“நாம் ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டும். எல்லா ஐரோப்பிய நாடுகளும் இந்த அழுத்தத்திற்கு எதிராக ஒன்றாக எழ வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.

இது எமக்கும் பொருந்தும். இந்த கொள்கையை தமிழ் இனமும் கடைப்பிடித்தாலே ஒற்றுமை அற்ற இனம் என பகைவர்களின் மனங்களிலும் படிந்துள்ள ஏளனத்தையும் போக்க முடியும்.

இறுதியாக, 23 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் களத்தில் நின்று போராடிய எனது நண்பர் ஒருவர் தியாகி திலீபன் தொடர்பில் தனது முகநூலில் இட்ட பதிவை இங்கு தருகின்றேன்.

“ஒருவேளை பசியே உயிர்வலியாய் இருக்கையிலே, பலநாள் பசியிருந்து உடலுருக்கி உயிர் தந்தாய் உத்தமனே”

 “விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்றுரைத்தாய் ”

“இன்றுனக்கு நாம் என்ன சொல்வோம்…….”

Exit mobile version