Tamil News
Home செய்திகள் இலங்கை-போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள்-UNICEF கண்டனம்

இலங்கை-போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள்-UNICEF கண்டனம்

இலங்கையில் இடம்பெறும் போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் ஐ.நா. சிறுவர் நிதியம் (UNICEF) கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட போராட்டங்களின் போது வன்முறை இடம்பெறுவது குறித்த தகவல்கள் தொடர்பில் யுனிசெப் அக்கறை கொண்டுள்ளது. அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கு அனைவருக்கும் உள்ள உரிமை மற்றும் சிறுவர்கள் உட்பட அனைவரினதும் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என  ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தின்படி சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் தங்களை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்கவும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டு்ளளUNICEF, சிறுவர்கள் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம், உள்ளூர் சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு பகிரப்பட்ட பொறுப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் “அனைத்து வன்முறைச் செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் நிகழும் இடங்களில் சிறுவர்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். சிறுவர்களுக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சிறுவர்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதங்களை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் உறுதிப்படுத்துமாறு சட்ட அமுலாக்கப் பிரிவினரை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று UNICEF  தெரிவித்துள்ளது.

Exit mobile version