Home செய்திகள் திருமலை பாடசாலை விவகாரம்: தொடரும் ஆர்ப்பாட்டம்

திருமலை பாடசாலை விவகாரம்: தொடரும் ஆர்ப்பாட்டம்

திருமலை பாடசாலை விவகாரம்:

திருமலை பாடசாலை விவகாரம்: திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நேற்று ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் இன்று(03) மாணவர்களின் பெற்றோரும் பழைய மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து பாடசாலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு மாகாண வலயக் கல்வி அலுவலகம் சென்று இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்கக் கோரி மனு ஒன்றைக் கையளித்ததாகவும் இதையடுத்து வலயக் கல்விப் பணிப்பாளர் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

அபாயா அணிந்து வரவேண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இரு வருடங்களுக்கு முன்னர் குறித்த ஆசிரியை ஹபாயா அணிந்து சென்றதால் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் ,மீண்டும் குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமைகளைப்  பொறுப்பேற்க நேற்று சென்ற ஆசரியருக்கும்  பாடசாலை நிர்வாகத்துக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் தன்னை தாக்கியதாகவும்,  ஹபாயா அணிந்து வந்த ஆசிரியையும், ஹபாயா அணிந்து வந்திருந்த ஆசிரியை தாக்கியதாக அதிபரும்,  திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதற்கென சென்றுள்ளனர்.

முன்னதாக ஏற்பட்ட ஹபாயா பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற   வழக்கில்  குறித்த ஆசிரியை மீண்டும் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இணைந்து செய்யப்பட வேண்டும் என கேட்டதற்கு இணங்க, அரச தரப்பு அனுமதி அளித்து கல்வி அமைச்சு அதற்கான கடிதத்தை வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.  இதனை தொடர்ந்தே இந்த விவகாரம் மீண்டும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும்  காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எது எவ்வாறாக இருந்த போதிலும் ஹபாயா உடை அணிவது   அவரது தனி மனித சுதந்திரம்.  அரசியலமைப்பின் 1972 இரண்டாம் குடியரசு யாப்பின் பிரகாரம் மனித உரிமைகள் தொடர்பில்  மூன்றாம் அத்தியாயம் ஊடாக மத சுதந்திரம் எடுத்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்கள் பாடசாலை கல்விச் சமூகத்தை சீர் குழைக்கவும் இன வாதத்தை தூண்டவும்  வழியை ஏற்படுத்தும் என கருதப்படுகின்றது.

 

Exit mobile version