Tamil News
Home செய்திகள் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை – அதுரலியே ரத்ன தேரர்

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை – அதுரலியே ரத்ன தேரர்

“ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார்” என்று தெரிவித்த சுயாதீன உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர், “ஆனால் எந்த வகையிலும் அவ்வாறான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தாம் இடமளிக்க மாட்டோம்”  என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதுரலியே ரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு விடயங்களை கதைக்கின்றார். நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நின்று பாருங்கள் என்று கேட்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு ரணில் விக்கிரமசிங்க தந்திரங்களை செய்கின்றார். பொதுஜன பெரமுனவில் சிலரை இணைத்துக்கொண்டும்.

சஜித் தரப்பில் இருந்தும் சிலரை இணைத்துக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல திட்டமிடுகின்றார். அதற்காக தனது கட்சியை பலப்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முடியுமென்று எதிர்பார்க்கின்றார்.

இதற்காகவே வடக்கு, கிழக்கில் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைக்கின்றார். மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நேரத்தில் அவர் எப்படி இதனை கதைக்க முடியும். அப்படியென்றால் அந்த அதிகாரங்களை ஆளுநர்களிடம் தான் வழங்க வேண்டும்.

இப்போது நீங்கள் தேவையில்லாத பிரச்சினையையே ஏற்படுத்துகின்றீர்கள். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என்றார்.

Exit mobile version