Tamil News
Home செய்திகள் முதல் கட்டம் 330 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

முதல் கட்டம் 330 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இன்னும் இருதினங்களில் இலங்கைக்கு வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளமையானது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய பாதையில் முக்கிய படிக்கல்லாகும் என்று சர்வதேச நாடுகளும் சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை நேற்று முன்தினம் திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது. அதனையடுத்து சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளும், சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலக வங்கி

அதன்படி இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியப் பிரதித்தலைவர் மார்டின் ரெய்ஸர், ‘இலங்கையில் நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையையும் கடன்களின் நிலையான தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையிலான நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளமையை வரவேற்கின்றோம். அதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், நேர்மறையான மாற்றத்துக்கும் அவசியமான ஆதரவை உலக வங்கி தொடர்ந்து வழங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

அதேவேளை ‘இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதியளிக்கப்பட்டமையை வரவேற்கின்றோம். பொருளாதார மீட்சியை நோக்கிய பயணத்தில் இது முக்கியமான படிக்கல்லாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமும் நாட்டின் பொருளாதாரமும் சீரான பாதையில் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் உரிய மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன், கடன்மறுசீரமைப்புச்செயன்முறையைப் பூர்த்திசெய்யவேண்டும். சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான கட்டமைப்பு ரீதியானதும், நிலைத்திருக்கக்கூடியதுமான மறுசீரமைப்புக்கள் நாட்டுமக்களின் சுபீட்சத்தை உறுதிப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும்’ என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியா

மேலும் ‘சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய முக்கிய நடவடிக்கையாகும். அதன்படி நிலையான பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய இலங்கையின் நடவடிக்கைகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்’ என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளது.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாகவும், இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் ஒன்றிணைந்து பணியாற்றிய கடன்வழங்குனர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்பு, நிதியியல் ஒத்துழைப்பு, மறுசீரமைப்புச்செயன்முறைகளின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கைக்கான தமது ஆதரவு தொடரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version