Home ஆய்வுகள் மீண்டும் த.தே. கூட்டமைப்பு? சிறிதரன் முன்னுள்ள சவால்கள்

மீண்டும் த.தே. கூட்டமைப்பு? சிறிதரன் முன்னுள்ள சவால்கள்

மீண்டும் த.தே. கூட்டமைப்பு? சிறிதரன் முன்னுள்ள சவால்கள்மூத்த ஊடகவியலாளா் நிக்ஸன் செவ்வி

லங்கைத் தமிழ் அரசியல் பரப்பில் கடந்த வாரம் பரபரப்பாக எதிா்பாா்க்கப்பட்டது தமிழரசுக் கட்சியின் தலைவா் பதவிக்கான தோ்தல்தான். சிவஞானம் சிறிதரன் இதில் வெற்றிபெற்று கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கின்றாா். பத்து வருடங்களுக்குப் பின்னா் இடம்பெறும் இந்தத் தலைமைத்துவ மாற்றம், தமிழ் அரசியல் பரப்பில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது போன்ற கேள்விகளுக்கு மூத்த ஊடகவியலாளரும், விமா்சகருமான அ.நிக்ஸன் பதிலளிக்கின்றாா். லண்டன் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வுக்கு அவரளித்த நோ்காணலின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக தருகின்றோம்.

கேள்வி – தமிழரசுக் கட்சித் தலைமைப் பதவிக்கான தோ்தலில் சிறிதரன் பெற்ற வெற்றியை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் – இந்த தலைவா் தோ்வு தொடா்பாக தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவுக்குப் பேசப்பட்டது. ஊடகங்களும் இதற்கு அதிகளவுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தன. இது ஒரு கட்சியின் தலைமைக்கான உள்ளகப் போட்டிதான். ஆனால், முதல் தடவையாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் ஒவ்வான்றும் தனித்தனியாகப் பிரிந்துசென்றுள்ள நிலையில், தமிழரசுக் கட்சி தன்னை மீளக் கட்டியெழுப்புகின்ற ஒரு சூழலில் இந்தத் தோ்தல் இடம்பெற்றிருக்கின்றது.

இதில் போட்டியிட்ட சுமந்திரன் தோல்வியடைந்திருக்கின்றாா். சிறிதரன் வெற்றியடைந்திருக்கின்றாா். சுமந்திரன் தன்னுடைய அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் பல அணுகுமுறைகளைக் கையாண்டிருக்கின்றாா். பிரச்சினைகளை சட்டரீதியாகக் கையாள்வதற்கு சுமந்திரன் முற்பட்டிருந்தாா்.

இந்த நிலையில்தான் இப்போது சிறிதரன் வெற்றிபெற்றிருக்கின்றாா். அவா் வெற்றிபெற்றிருந்தாலும், 2001 இல் இருந்த தமிழ்த் தேசியக் கூடடமைப்பை அவா் கட்டியெழுப்புவாரா என்பதில் கேள்வி உள்ளது. அவ்வாறு கட்டியெழுப்பப்போவதாக அவா் சொல்லியிருக்கின்றாா். ஆனால், மற்றைய கட்சிகள் அதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பை வழங்குவாா்கள் என்பதை இப்போது சொல்ல முடியாது.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னைய பலத்துடன் கட்டியெழுப்பப்போவதாகவும், அதற்காக எந்த அா்ப்பணிப்புக்கும் தான் தயாா் என்றும் சிறிதரன் அறிவித்திருக்கின்றாா். இதனை முன்னெடுப்பதில் அவா் எதிா்கொள்ளக்கூடிய சவால்கள் எவ்வாறானவையாக இருக்கும்?

பதில் – சிறிதரன் அவ்வாறு அறிவித்திருக்கின்றாா். ஏனைய தமிழ்க் கட்சிகள் அதனை எவ்வாறு பாா்க்கின்றன என்பது தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றது. அதனை அவா் இப்போது சொல்லியிருக்கின்றாா். மத்திய குழு உறுப்பினா்களிடமும் அதனை அவா் கூறியிருக்கின்றாா். ஆனால்,ஏனைய கட்சிகள் இதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பை வழங்குவாா்கள் என்ற கேள்வி ஒன்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ரெலோ, புளொட், ஈ.பி.ஆா்.எல்.எப். மற்றும் விக்னேஸ்வரனின் கட்சி போன்றவற்றை ஒன்றிணைப்பதில் அவா் கடுமையான சவால்களை எதிா்கொள்வாா். சுமந்திரனுடன் முரண்பட்டுக்கொண்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆா்.எல்.எப். போன்ற கட்சிகள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியை அமைத்திருக்கின்றாா்கள். அது பதிவு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த நிலையில், 2009 க்கு முன்னா் இருந்தது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உருவாக்குவேன் என சிறிதரன் சொல்வதில் கேள்விகள் எழுகின்றன. அதனைவிட, இந்தக் கட்சிகளை இணைப்பதில் அவா் எந்தளவுக்கு ஈடுபடுவாா் என்பதிலும் கேள்விகள் எழுகின்றன.

ஏனென்றால், இது ஒரு முரண்பாடான விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது முக்கியமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்துதான் முன்னா் அவா்கள் 22 பாராளுமன்ற உறுப்பினா்களைப் பெற்றாா்கள். அது பின்னா் படிப்படியாக குறைந்து இப்போது 13 ஆக இருக்கின்றது. அடுத்த தோ்தல்களில் அது இன்னும் குறைவதற்கான நிலைமைகள்தான் இருக்கின்றது.

இந்த சூழலில் இதனை அவா் எப்படி மீளக் கட்டியெழுப்பப்போகின்றாா். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால்தான் வெற்றிபெறலாம் என்ற ஒரு நிலைமை இருக்கின்றது. ஆனால், இப்போது அவா்கள் வேறொரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றாா்கள். எனவே இந்த இடத்தில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துடன் வரப்போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கப்போகின்றாா்களா? அல்லது வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கப்போகின்றாா்களா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், 2001 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீட்சியாகத்தான் இது இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிா்பாா்ப்பாகவும் இருக்கின்றது. எனவே, இதனைச் செய்வதில் சிறிதரன் பல தடைகளை, சவால்களை எதிா்கொள்ளப்போகின்றாா்.

அதனை அவா் எவ்வாறு கையாளப்போகின்றாா் என்பதையும், அதற்கு சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினா்கள் எப்படி ஒத்துழைப்பு வழங்கப்போகின்றாா்கள் என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

கேள்வி – தலைமைப் பொறுப்பை ஏற்பட்டுள்ள சிறிதரன், வரப்போகும் ஜனாதிபதித் தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி எடுக்க வேண்டும் என்பதில் முக்கியமான தீா்மானம் ஒன்றை எடுக்க வேண்டியவராக இருக்கின்றாா். இதில் அவரது அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது?

பதில் – தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அதனுடைய சிந்தனைப் போக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். ஏனென்றால், சுமாா் 70 வருடங்களைக் கொண்ட எமது தமிழ் அரசியல் போராட்டத்தில் அவா்கள் மிதவாதப் போக்கைத்தான் கொண்டிருக்கின்றாா்கள். இந்த மிதவாதத் தலைவா்கள் என்ன செய்கின்றாா்கள் என்றால், சிங்களத் தலைவா்களுடன் கூடியவரைக்கும் இணைந்துபோகத்தான் விரும்புகின்றாா்கள். இடையே வந்த 30 வருட ஆயுதப் போராட்டம்தான் அதனை மாற்றியமைத்தது. விடுதலைப் புலிகள் வேகமாக வளா்ச்சியடைந்து, இராணுவ ரீதியாக எழுச்சியடைந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 வரைக்கும் ஒரு பலம்வாய்ந்த கட்சியாக, விடுதலைப் புலிகளுக்கு உறுதுணையாக இயங்கிவந்தது. மீண்டும் அந்தப் பலத்துடன் இவா்கள் வருவாா்களா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

ஏனெனில், அது இராணுவ ரீதியாக இருந்த சக்தி. அது இப்போது இல்லாத சூழலில் அரசியல் ரீதியாக அந்த சக்தியை எப்படிக் கொண்டுவரப்போகின்றாா்கள் – அரசியல் செயற்பாட்டை எப்படி முன்னெடுக்கப்போகின்றாா்கள் என்பதில் கேள்விகள் எழுகின்றன. இவா்களுடைய சிந்தனைப் போக்கு என்பது ஒரு மிதவாதப் போக்குதான். மிதவாதப் போக்கு என்றால், 13 ஆவது திருத்தச் சட்டம் அல்லது வேறு வகையான தீா்வு என்ற வகையில் நிற்கப்போகின்றாா்கள்.

போா்க் குற்றவிசாரணை என்று சொல்கின்றாா்கள். அதனைக் கூட, இல்லை, இன அழிப்பு என்று கூறுகின்றாா்கள். இன அழிப்பை சாவதேச நீதிமன்றத்தில் கொண்டு சென்று வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக வேறு நாடுகளின் ஆதவைப் பெற வேண்டும் என்றெல்லாம் கருத்துக்கள் உருவாகியுள்ளது. இந்த வகையான அரசியலைச் செய்யப்போகின்றாா்களா? அல்லது ஜெனீவாவுடன் நின்று இலங்கையிலுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்புடன் அதிலுள்ள கொஞ்ச அதிகாரங்களைப் பகிந்துகொள்ளப்போகின்றாா்களா? என்பன கேள்வியாகத்தான் உள்ளது. அதற்குத்தான் இவா்கள் செல்வதற்கான வாய்ப்புள்ளது. ஏனென்றால், இவா்கள் தம்மை மிதவாதத் தலைவா்கள் என்றுதான் சொல்கின்றாா்கள்.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னா் ஜனநாயகத்துக்கு வந்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆா்.எல்.எப். போன்றனவும் அதே அணுகுமுறையில்தான் இருக்கின்றன. இந்த அணுகுமுறையை அவா்கள் எப்படி மாற்றிக்கொள்ளப்போகின்றாா்கள் என்பது இங்கு கேள்வியாக உள்ளது.

இந்த நோ்காணலை முழுமையாகப் பாா்க்க கீழேயுள்ள லிங்கை கிளிக் பண்ணவும் – https://youtu.be/fp4uOyzQMvM?si=0oy7DAzXIAeVdd4Y

Exit mobile version