Home செய்திகள் எல்லை கடக்கும் இந்திய மீனவர்களினால் தமிழ் மீனவர்கள் பாதிப்பு

எல்லை கடக்கும் இந்திய மீனவர்களினால் தமிழ் மீனவர்கள் பாதிப்பு

எல்லை தாண்டிய இந்திய இழுவை மடி படகுகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது எல்லை தாண்டிய இந்திய இழுவைய் மடி படகுகள் வடமராட்சி கிழக்கு மீனவர்களுடைய தகவல்களின்படி சுமார் 200 மீட்டர் தொலைவில் வந்து 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய இந்த வாழ்வாதாரத்தில் கை வைக்கிற வேலை மிக மோசமானது என்றும், இதனால் தமிழ் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கரையிலிருந்து சிறிது தூரத்தில் கட்டுமரத்தில் சிறு தொழில்களை செய்து வருவதாகவும், அத்தொழில்களைக் கூட இந்திய மீனவர்கள் விட்டுவைக்கவில்லை என்றும், இது தொடர்பில் தாங்கள் பல முறை  மீன்பிடி அமைச்சு உட்பட அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு இதுவரை தங்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்றும் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி உட்பட அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக எல்லை தாண்டிய இந்திய இழுவைமடி படகுகளால் பிரதேச மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் ஒரு கள ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆய்வு நடவிக்கையில் இணைந்து கொண்டிருந்த வடமாகண கடற்தொழிலாளர் இணையத்தில் தலைவர் ஏன்.வி. சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கும்போது,

யுத்தம் மற்றும் சுனாமி போன்ற பாதிப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இம் மீனவ மக்களுக்கு தற்போது மூன்று வகையான பிரச்சனைகள் வருவதாகவும், குறிப்பாக மீனவர்களுடைய தொழிலை பாதிக்கக்கூடிய வகையில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் மணல் அகழ்வு, மற்றும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சனை. இவை மூன்றும் இந்த மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


ilakku-weekly-epaper-150-october-03-2021

Exit mobile version