Tamil News
Home செய்திகள் இனப்படுகொலையின் முக்கிய சாட்சியமாக மண்டைதீவு கிணறு-சி.சிறீதரன்

இனப்படுகொலையின் முக்கிய சாட்சியமாக மண்டைதீவு கிணறு-சி.சிறீதரன்

இனப்படுகொலையின் முக்கிய சாட்சியமாக மண்டைதீவு கிணறு காணப்படுவதாகவும் அவற்றினை ஆய்வுக்குட்படுத்தினால் இனப்படுகொலை சாட்சியங்கள் வெளியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

யாழ். வேலணைப் பிரதேச செயளாளர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 29 தனி நபர்களுக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளைச் சுவீகரித்து  வெலுசுமண கடற்படை முகாம் அமைப்பதற்கான காணி அளவீடு மற்றும்  காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து  இன்றையதினம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

‘வெலுசுமண கடற்படை முகாமுக்கு வழங்குவதற்காக காணியை அளக்க முயற்சித்த போதே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மண்டைதீவு கிழக்கிலுள்ள இப் பிரதேசமானது சிறந்த மண் வளத்துடன் நீர் வளத்தையும் உடைய செழிப்பான விவசாய நிலமாகும்.  இந் நிலத்தை 1990 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஆக்கிரமித்துள்ள இராணுவம் இன்று வரை அகலாதுள்ளனர்.

வேலணை இ மண்கும்பான் இ அல்லைப்பிட்டி இ மண்டைதீவைச் சேர்ந்த  60 க்கு  மேற்பட்ட இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு முன்னாலுள்ள கிணற்றினுள் புதைக்கப்பட்டு இன்றும் எலும்புக் கூடுகளாகக் காணப்படுகின்றனர்.

இவற்றை ஆய்வு செய்யும்படி.வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பாராளுமன்றத்தில் கோரிய போதும் இதுவரை நடைபெறவில்லை. கடற்படை இவ்விடத்தைவிட்டு செல்லுமிடத்து இவ்விடம் ஆய்வுக்குட்படுத்தப்படின் இனப்படுகொல சாட்சியங்கள் வெளியாகும் என்பதால் கடற்படை தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு அரசும் தொடர்ந்து ஆதரவளிக்கின்றது.

இவ் விடயங்கள் தொடர்பில்  ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் கூடுதல் கவனமெடுத்து இங்குள்ள புதைகுழிகளைத் தோண்டவேண்டும் என்பதுடன் தற்போது 18 ஏக்கரென நில அளவைத்திணைக்களம் குறிப்பிட்டாலும் 40 க்கு மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.   ஆகவே  காலங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை மீள ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version