Tamil News
Home செய்திகள் கோட்டாபய ராஜபக்ஷவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதி

கோட்டாபய ராஜபக்ஷவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதி

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு போராட்டம் காரணமாக சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயண அனுமதி, மேலும் 14 நாட்களுக்கு நீடித்து அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு தப்பி ஓடியிருந்தார்.

ஜூலை 14 ஆம் திகதி, மாலைதீவில் இருந்து  சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் வந்த சிறிது நேரத்திலேயே, அவர் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் 15 ஆம் திகதி அன்று பாராளுமன்றத்தால் உத்தியோகப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட புதிய விசா அடுத்த மாதம் 11ஆம் திகதியுடன் காலாவதியாகும் என சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு பொதுவாக 30 நாட்களுக்கு பயண அனுமதி வழங்கப்படும் என சிங்கப்பூர் ஐ.சி.ஏ. ஆணைக்குழு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version