Home செய்திகள் காவல்துறையின் காவலில் இளைஞன் மரணம்-உடற்கூற்று பரிசோதனைகளில் முரண்பாடு உள்ளதாக தகவல்

காவல்துறையின் காவலில் இளைஞன் மரணம்-உடற்கூற்று பரிசோதனைகளில் முரண்பாடு உள்ளதாக தகவல்

காவல்துறையின் காவலில் இளைஞன் மரணம்: காவல்துறை காவலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு இருதயபுரம் இளைஞனின் படுகொலை தொடர்பான வழக்கில் உடற்கூற்று பரிசோதனைக்கும் அவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களில் இரசாயன பகுப்பாய்வு பரிசோதனையின் அறிக்கையிலும் முரண்பாடுகள் உள்ளதாக சட்டத்தரணி சின்னத்துரை ஜெகன் தெரிவித்தார்.

காவல்துறை காவலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு இருதயபுரம் இளைஞன் விதுஷனின் வழக்கு இன்று(27) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டிருந்த இளைஞன், காவல்துறையின் காவலில் இருந்தபோது உயிரிழந்திருந்தார்.குறித்த இளைஞன், ஐஸ் போதைப்பொருள் பக்கெட்டை  விழுங்கியதால் அது வயற்றினுள் வெடித்து உயிரிழந்துள்ளதாக  காவகல்துறையினரால்  தெரிவிக்கப்பட்டது.அதனை குறித்த இளைஞனின் குடும்பத்தினர் மறுத்திருந்ததுடன் குறித்த இளைஞனை காவல்துறையினர்  தாக்கியதாலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இளைஞனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இறந்தவர்களின் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த சான்று பொருட்கள் இலங்கை இரசாயணப்பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி சின்னத்துரை ஜெகன் தெரிவித்தார்.

அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட சான்றுபொருட்களை ஆய்வுசெய்தபோது அந்த பொருட்களில் எந்தவித தடைசெய்யப்பட்ட போதைப்பொருளும் அந்த சான்றுபொருளில் இல்லையென்று சொல்லியே அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த இளைஞனின் உடல்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் அந்த இளைஞன் மெத்தமெயின் என்று சொல்லப்படுகின்ற பொருள்தான் அந்த இளைஞனின் இறப்புக்கு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அறிக்கையிலும் முரண்பாடுகள் உள்ளதாக நீதிவான்நீதிமன்றில் குறிப்பிடப்பட்டது.இறப்பு காரணம் மெதமெயின் என்ற போதைப்பொருள் என்று சொல்லப்பட்டாலும் அவர் விழுங்கியதாக சொல்லப்படும் சான்றுப்பொருட்களில் மெத்தமெயினோ தடுக்கப்பட்ட அவுடதங்களோ பாவிக்கப்படவில்லையென்று சொல்கின்றது.இந்த இரண்டு காரணங்களும் முரண்படுவது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேபோன்று காவல்துறையினர் இரத்தமாதிரிகளை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் அந்த அறிக்கை கிடைத்ததும் விசாரணைகள் முன்னெடுப்பதற்காக எதிர்வரும் மாசி மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version