Home செய்திகள் சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே இந்திய மீனவர் அத்துமீறலுக்கு காரணம்; டக்ளஸ் மீது சுமந்திரன் குற்றச்சாட்டு

சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே இந்திய மீனவர் அத்துமீறலுக்கு காரணம்; டக்ளஸ் மீது சுமந்திரன் குற்றச்சாட்டு

சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே இந்திய மீனவர்நாட்டில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் கூறுவது என்ன வென்றால் சட்டத்தை இயற்றிக் கொடுத்திருக்கின்றோம். இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதைவைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச்செய்த பல விடயங்கள் அண்மைக்காலமாக நடந்திருக்கின்றன.

அவர்களுடைய லட்சக் கணக்கான ரூபா மீன்பிடி உபகரணங்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டன. இந்த விடயங்கள் சம்பந்தமாகவே இந்தியத் துணைத் தூதுவருடன் கலந்துரையாடினோம். 2018ஆம் ஆண்டு இழுவை மடித் தொழிலைத் தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்தச் சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதுதான் இதற்குப் பிரதான காரணமாகஇருக்கின்றது. அந்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் இந்தப் பிரச்சினை பெரியளவிலே தீர்ந்து விடும்.

அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் எச்சரிக்கை ஒன்றை தமிழக மீனவர்களுக்கு விடுத்திருந்தது. ஒரு கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது; ஆகவே, இலங்கை கடற்பரப்புக்குள் போகவேண்டாம் என்ற எச்சரித்தது. இதன் காரணமாக ஓரிரு வருடங்களாக வராமல் இருந்திருந்த தமிழக மீனவர்கள், அந்தச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனத் தெரிந்த பின்னர் மீண்டும் வர ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துமீறுபவர்களைக் கைதுசெய்து இந்தச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வது என்பதை மீன்பிடி அமைச்சு செய்ய வேண்டும். ஆகவே, சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே அத்துமீறல் தொடர்ச்சியாக நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால் சட்டங்களை இயற்றிக் கொடுத்திருக்கின்றோம். இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புக்களை ஏற்படுத்தும்” என்றார்.

தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர் தலைவர் ஒருவரே | போரியல் ஆய்வாளர் அரூஸ் | இலக்கு

Exit mobile version