சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை இராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை அந்நாட்டு இராணுவம் மறுத்துள்ளது.
சூடான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற துணை இராணுவப் படைகளில் ஒன்றான பலம் பொருந்திய ஆர்எஸ்எஃப் படைகளும் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் இராணுவமும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதல் இன்று (ஏப்.18) ஐந்தாம் நாளை எட்டியுள்ள நிலையில் அமெரிக்கா தலையீட்டின் காரணமாக போராடும் ஆர்எஸ்எஃப் படைகள் 24 மணி நேரம் மோதலை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்எஸ்எஃப் குழுவின் தலைவர் ஜெனரல் டகலோ, “பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் வகையிலும் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவம் செய்ய ஏதுவாகவும் 24 மணி நேரம் அமைதியைக் கடைப்பிடிக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால், இந்த மோதல் நிறுத்தத்திற்கு சூடான் இராணுவம் இசைவு தெரிவிக்குமா என்பது தெரியவில்லை. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறி இராணுவம் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கூட குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர். நாங்கள் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.
ஆனால், சூடான் இராணுவம் இப்படி ஒரு அமைதி ஒப்பந்தம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது. சர்வதேச சமூகம் இதில் மத்தியஸ்தம் செய்வதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
சூடான் நாட்டில் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் எனத் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.