Home செய்திகள் விளையாட்டுகள் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியை தப்பான வழியில் செல்லாது காப்பாற்ற முடியும்- கோவிந்தன்...

விளையாட்டுகள் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியை தப்பான வழியில் செல்லாது காப்பாற்ற முடியும்- கோவிந்தன் கருணாகரம்

விளையாட்டுகள் மூலம் தான்

விளையாட்டுகள் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியை எதிர்கால இளைஞர்களை தப்பான வழியில் இருந்து ஒரு நல்ல வழிக்கு இட்டுச் செல்ல முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்குவில் பகலவன் விளையாட்டுக் கழக மைதான பெயர்ப்பலகைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் க.ரகுநாதன் உள்ளிட்ட பகலவன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

விளையாட்டுகள் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியை எதிர்கால இளைஞர்களை தப்பான வழியில் இருந்து ஒரு நல்ல வழிக்கு இட்டுச் செல்ல முடியும். ஏனெனில் எமது போராட்டம் முடிந்ததற்குப் பிறகு வடக்கு கிழக்கிலே திட்டமிட்டு இளைஞர்களைத் திசை திருப்பும் கைங்கரியத்தை 2009ல் இருந்த 2015 வரை ஆட்சி செய்த மஹிந்த அரசு செய்திருந்தது.

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவற்காக அகிம்சை, ஆயுத ரீதியான போராட்டங்கள் நடைபெற்றது. 1969ம் ஆண்டு டெலோவினால் தான் இந்த ஆயுதப் பேராட்டத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது. 1983 ஜுலைக் கலவரத்தையொட்டி இந்த ஆயுதப் போராட்டம் வீறுகொண்டெழுந்தது. 2009 இந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு எதிர்கால இளைஞர்களை போராட்ட சிந்தனைகளில் இருந்து மாற்றுவதற்காக சில கபடத்தனமான வேலைகள் வடக்கு கிழக்கிலே நடைமுறைப்படுத்தப்பட்டன.

போதைப்பொருட்கள் வடக்கு கிழக்கிலே தாராளமாக விற்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. அந்த நேரத்திலே அதனைத் தடுக்க வேண்டியவர்கள் கூட கண்டும் காணாமல் இருந்தார்கள். இளைஞர்கள் தங்கள் உரிமை சம்மந்தமாகவோ, போராட்டம் சம்மந்தமாகவோ சிந்திக்கக் கூடாது என்பதற்காக அவர்களைக் தவறான வழிகளில் தள்ளும் நிலை இருந்தது. அந்த நிலை எங்களது எதிர்ப்பிரச்சாரத்தின் மூலம் மாற்றப்பட்டு வருகின்றது.

அதற்கீடாக விளையாட்டுத் துறைகளிலே நமது இளைஞர்களை நாங்கள் ஊக்கப்படுத்துவோமாக இருந்தால் அத்துறைக்கூடாக அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த முடியும். நாங்கள் எமது சந்ததிக்காக எதிர்காலத்தை நல்வழிப்படுத்தக் கூடிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

இந்த நாட்டிலே பாதிக்கப்பட்ட, பல இழப்புகளைச் சந்தித்த சமூகம் நாங்கள் கல்வி உட்பட பல துறைகளிலும் மேலோங்க வேண்டியவர்கள் நாங்கள். அதே நேரத்திலே விளையாட்டுத் துறையிலும் நாங்கள் மேலோங்குவோமாக இருந்தால் உடல் ரீதியாக மாத்திரமல்லாமல், உள ரீதியிலும் எமது சந்ததியை முன்நோக்கிக் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.

Exit mobile version