வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து இரகசிய உத்தரவை, அந்நாட்டு அதிபர் கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.
இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறும்போது, “வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம் கஷ்டம் அதிகரித்து வருகிறது. மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40% அதிகரித்துள்ளது.
வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு வட கொரியாவில் பட்டினிச் சாவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளில் வட கொரியா இறங்கி உள்ளது.
தற்கொலையை சோசலிசத்திற்கு எதிரான தேசத் துரோகம் என்று விவரிக்கும் கிம், அதனைத் தடுக்க இரகசிய உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார். மேலும், தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் அரசாங்கங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவுத்துள்ளது.
முன்னதாக, வட கொரியா மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் தூக்கிலிடுகிறது என்று தென்கொரியா குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்தத் தகவலை தென் கொரியா வெளியிட்டுள்ளது.