Tamil News
Home செய்திகள் மியான்மர் -முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

மியான்மர் -முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

ஊழல் வழக்குகளில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர்ஆங் சான் சூகிக்கு(Aung San Suu Kyi) மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அரசின் ஆலோசகராக சூகி பொறுப்பு வகித்தார்.

எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்து  இராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில்,இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறியது, ஊழலில் ஈடுபட்டது என ஆங் சான் சூகி மீது 11 வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் ஆங் சான் சூகிக்கு எதிரான சில ஊழல் வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஊழல் வழக்குகளின் விசாரணை மூடப்பட்ட அறைக்குள் நடைபெற்றதாகவும், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், ஆங் சான் சூகி வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சூகியின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version