Tamil News
Home உலகச் செய்திகள் சீனாவில் தினமும் 5,000 பேர் உயிரிழப்பதாக தகவல்

சீனாவில் தினமும் 5,000 பேர் உயிரிழப்பதாக தகவல்

சீனாவில் தினமும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதோடு நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினமும் எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது. எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்பன குறித்த விவரங்களை சீன அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது. எனினும் அந்த நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சீனாவின் உண்மை நிலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இதன்படி சீனாவின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான சடலங்கள் போர்வையால் சுற்றப்பட்டிருக்கின்றன. மயானங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

சீனாவின் தற்போதைய நிலவரம் குறித்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்ற ஆய்வு நிறுவனம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

சீனாவில் கொரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 என்ற வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் தினமும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த ஒரு மாதத்தில் நாள்தோறும் 37 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மார்ச் மாதத்தில் நாள்தோறும் 42 இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும். அப்போது உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும். சீனாவில் தற்போது பரவும் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் அடுத்தடுத்து 3 அலைகள் வரை ஏற்படக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version