Tamil News
Home செய்திகள் இலங்கைக்கான 2.9 பில்லியன் நிதியுதவியை செவ்வாய் அறிவிக்கிறது சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கான 2.9 பில்லியன் நிதியுதவியை செவ்வாய் அறிவிக்கிறது சர்வதேச நாணய நிதியம்

கடன் மறுசீரமைப்புக்கான எழுத்து மூல உத்தரவாதத்தை அனைத்து தரப்புகளும் வழங்கியுள்ள நிலையில், இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கான  உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியம் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இந்த அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் வழங்க உள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு  மார்ச்  மாதம் நடுப்பகுதியில்  தீர்மானித்தது. அதன் பின் நாட்டில் அந்நியச் செலாவணி நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, மருந்துகளை வாங்குவதில் உள்ள சிரமங்கள், பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி மற்றும்  வறுமை  அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை இலங்கை எதிர்க்கொண்டது.

நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து  சர்வதேச நாணய நிதியம் 2021 முதல் தொடர்ந்து எச்சரித்திருந்தது.

இந்நிலையில் நெருக்கடியிலிருந்து மீள 2022 நடுப்பகுதியில் இருந்து சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக  பேச்சுவார்த்தைகள்   முன்னெடுக்கப்பட்டதுடன் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இடைக்கிடையே இலங்கைக்கு விஜயம் செய்து,  கொடுப்பனவு நிலுவை நெருக்கடி, நிதி நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து ஆழமாக கலந்துரையாடினர்.

இதன் பிரகாரம் 2022 ஆண்டு செப்டம்பர் மாதம்  முதலாம் திகதியில் சர்வதேச நணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது. நாடு கடன் நிலைத்தன்மையை அடையும் வரை இந்த ஒப்பந்தத்தை சர்வதேச நணய நிதியம் பணிப்பாளர் சபைக்கு  சமர்ப்பிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது.

எனவே, கடனை நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. கடந்த  ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இந்தியா உறுதிமொழியை வழங்கி இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கியது. அதனை தொடர்ந்து சீனாவும் வழங்கியது. மேலும் இலங்கைக்கு நிதி உத்தரவாதத்தை வழங்க  பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டது.

அதன் பின்னர், மார்ச் 2 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்  கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் இலங்கைக்கான கடன் உதவித் திட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல்களுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்துடனான  பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டியமை கட்டாயமாகும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதன் பிரகாரமே மின்சார விலையை மறுசீரமைத்தல், பெற்றோலிய விலைகளை மறுசீரமைத்தல், மத்திய வங்கியின் சுயாதீனத்தை  உறுதி செய்தல், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துதல், பொது அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல், சமூக பாதுகாப்பு  கட்டமைப்பை வலுப்படுத்துதல், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க பணியாற்றுதல் மற்றும் பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல். பெற்றோலிய  மற்றும் மின்சாரத் துறைகளில் போட்டித்தன்மையை  விரிவுபடுத்துதல் போன்ற பல விடயங்களை  அரசாங்கம் உள்நாட்டில் பல எதிர்ப்புகளையும் தாண்டி முன்னெடுத்திருந்தது.

இவ்வாறு கடின உழைப்பிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான 2.9 பில்லியன் நிதியுதவி திட்டம் குறித்த உத்தியேதகப்பூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version