Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர் இறைமையைப் பேணப் பண்பாட்டு எழுச்சியும் தேசிய வாழ்வும் தாயகத்திலும் உலகிலும் உடன் கட்டமைக்கப்பட வேண்டும்...

ஈழத்தமிழர் இறைமையைப் பேணப் பண்பாட்டு எழுச்சியும் தேசிய வாழ்வும் தாயகத்திலும் உலகிலும் உடன் கட்டமைக்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 278

ஈழத்தமிழர் இறைமையைப் பேணப் பண்பாட்டு எழுச்சியும் தேசிய வாழ்வும் தாயகத்திலும் உலகிலும் உடன் கட்டமைக்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 278

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் இந்துக்களின் முக்கிய நாளென்று சிறிலங்கா ஜனாதிபதியே வாழ்த்துத் தெரிவித்து ஏற்றுக்கொண்ட அதே மகாசிவராத்திரி நாளன்றே, இரவு வழிபாட்டுச் சுதந்திரம் பறிக்கப்பட்டுச் சிறிலங்காப் பொலிசார் அனைத்துலக சட்டங்களுக்கும் மனித உரிமைகள் சாசனத்திற்கும் எதிராக அடியார்களைச் சிறிலங்காவின் அடிமைகள் போல் நடாத்திய வரலாறு 08.03.2024இல் பதிவாகியது. கூடவே குடிதண்ணீர் தாங்கியைத் திறந்து விட்டு சிறிலங்காப்படையினர் தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்தி மனிதாயத்துக்கு எதிரான குற்றத்தையும் செய்தனர். தொடர்ந்து பாதிப்புற்ற ஐயரும் 7 அடியவர்களும் தொல்லியல் வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிகளுக்குள் சேதம் விளைவிக்கத் தீயையும் நீரையும் கொண்டு சென்றனரெனப் போலிக் கிரிமினல் குற்றம் பொலிசாரால் சுமத்தப்பட்டுக் கைதுசெய்யப்பட்டு கைவிலங்குகளை அகற்றாமலே அடிமைகள் போல் வைத்தியசாலையில் அடிகாயங்களுக்குச் சிகிச்சையளிப்பித்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அடுத்த விசாரணைவரை விசாரணைச்சிறைக்கு கைவிலங்குகளுடனேயே அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். விசாரணைச் சிறையில் தங்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமைகள் வன்முறைகளை எதிர்த்து அப்பாவிகளான தங்கள் விடுதலைக்காகப் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த நிகழ்வு ஈழத்தமிழர்களின் மேலான பண்பாட்டு இனஅழிப்பு நோக்கில் சிறிலங்காப் பொலிசார் செயற்பட்டு வருவதற்கு மற்றொரு பதிவாகவுள்ளது.

இதனால் ஈழத்தமிழர்களைத் தங்கள் பண்பாட்டைப் பேணுவதற்காக பேரெழுச்சி கொண்டெழவும் தமிழ்த்தேசியம் வாழப்படும் ஒன்று என்பதை வெளிப்படுத்தவும் விடுக்கப்பட்ட காலத்தின் அழைப்பாகவும் உள்ளது. முன்னர் பொங்குதமிழ் மூலம் ஈழத்தமிழ் மக்களின் பண்பாட்டுப் பேரெழுச்சியை உலகுக்கு உணர்த்திய பேராசிரியர் சிதம்பரநாதன் போன்ற வளவாளர்களின் இணைப்பில் ஈழத்தமிழர்களின் பண்பாட்டு மீளுருவாக்கமும், தமிழ்த்தேசியத்தை வாழ்வாக்க வேண்டுமென்று அரசறிவியல் நிலையில் அளப்பரிய பங்களிப்புக்களைச் செய்து வரும் பேராசிரியர் சோதிலிங்கம் போன்ற வளவாளர்களின் இணைப்பில் எல்லாப் பல்கலைக்கழக அறிவுச்சமுகமும் திரள்நிலை மக்கள் சமுகமும் இணைந்த தமிழ்த்தேசிய எழுச்சி, சாதி மத பிரதேச அரசியல்கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் சமுக உள்வாங்கலுக்குள் கொண்டு வந்து மாறுபட்ட விழுமியங்களையும் மதித்து சமுக ஒருமைப்பாட்டின் மூலம் சமுகத்திற்குச் சக்தியளிக்கும் செயலாகத் தாயகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பண்பாட்டு எழுச்சியும் தமிழ்த் தேசியத்தில் வாழ்வதும் உலகெங்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களால் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது இலக்கின் இவ்வாரத்தின் முதல் எண்ணமாக உள்ளது.

அரசற்ற தேசஇனமாக ஈழத்தமிழர்கள் 22.05. 1972 முதல் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுக்காக நடாத்தும் 52 ஆண்டுகாலத் தொடர் போராட்டத்தில் சமகால புதிய உலக அரசியல் ஒழுங்கு முறைக்கு ஏற்ப பொதுவெளியில் சனநாயகப் போராட்டங்களில் பயணிப்பதற்கான புதிய வாயில்களைப் பண்பாட்டு மீளுருவாக்கமும் தமிழ்த்தேசியம் வாழ்வாகுவதும் ஏற்படுத்தும் என்பது இலக்கின் உறுதியான எண்ணம். பண்பாட்டு மீளுருவாக்கம் மலையகத் தமிழர்கள் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் தங்கள் தனித்துவ அடையளாங்களைப் பேணிய நிலையில் ஈழத்தமிழர்களுடன் பண்பாட்டு அரசியலில் ஒரு சமுகமாகத் தங்களை முன்னிறுத்திச் சமகாலத்தின் பொதுத்தேவைகளைப் பெறுவதற்கான மக்கள் பலத்தையும் தோற்றுவிக்கும்.

அமெரிக்க இந்திய பயணங்களின் பின்னர் ஆசிய நாடுகளின் தூதுவர்கள் அணியொன்று தேசிய மக்கள் சத்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்காவைச் சந்தித்து உரையாடியதன் தொடர்ச்சியாக கனேடியத் தூதுவர் எரிக்வோல்ஸ் கனேடியத் தூதரக அரசியல் செயலாளர் பற்றிக் பிக்கரிங் ஆகியோர் மக்கள் விடுதலை முன்னனியின் தலைமை அலுவலகத்துக்குத் தாங்கள் சென்று அநுர குமார திசநாயக்காவுடனும் விஜித ஹெரத் உடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு எதிர்வரும் 23ம் திகதி கனடாவுக்கு இலங்கையின் இளையவர்களைச் சந்திக்கச் செல்லும் அநுரகுமாரதிசநாயக்காவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இவைகள் எல்லாம் இந்திய அமெரிக்க பின்னணியில் ஈழத்தமிழர் தேசஇனத்தவர் என்ற வரலாற்றுப் பரிணாம நிலை ஈழத்தமிழர் சிறிலங்காவின் ஒரு சமுகத்தவர் என்ற அரசியல் நிலையாக வரைவுபடுத்தப்பட்டு ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது ஈழத்தமிழர் சமுகப் பிரச்சினையென்று தீர்வினை அடைவதற்குச் சிங்களச் சமுகத்தை அந்த தீர்வையும் அவை எதிர்க்காது ஏற்க வைப்பதற்கான முயற்சிகளாக உள்ளன. இந்நேரத்தில் ஈழத்தமிழர் பண்பாட்டு எழுச்சியும் தேசிய எழுச்சியும் சனநாயக வழிகளில் வெளிப்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்களின் அடையாளம் அவர்கள் ‘தேச இனத்தவரே’ என்பதை இலங்கையிலும் உலகிலும் நிலைபெற வைக்க வேண்டிய நேரமிது.

மேலும் சிறிலங்கா இன்னும் இரண்டு வாரத்துள் தனது கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கைகளைச் செய்து அனைத்துலக நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடனுதவிக்குத் தன்னைத் தகுதியாக்கக் கடுமையாக முயற்சிக்கிறது. ஆனால் அனைத்துலக நாணயநிதிய இலங்கைக்கான செயற்திட்டத் தலைவர் பீற்றர் ப்ருவர் தலைமையில் மதிப்பீடுகள் நடைபெற்ற பின்னர் 33 வீதமான இலக்குகள் நிறைவேற்றப்படவில்லை இன்னும் 36 இலக்குகளுக்கு மதிப்பீட்டுக்கான தரவுகள் இல்லையென அறிக்கை வெளிவந்துள்ளது. இந்நிலையில் சிறிலங்கா பெற்ற இருதரப்பு கடன்களை மறுசீரமைக்க நாடுகளுடனான தனது நட்பைப் பயன்படுத்தினாலும் 11 தனியார் கடன் வழங்குநர்கள் உட்பட தனியார் கடன்வழங்குநர்களிடம் இருந்து பெற்ற 17 பில்லியன் டொலர் பிணைமுறிக் கடன்களுக்கு கடன் மறுசீரமைப்புச் செய்வதிலே சிக்கல் உள்ளது. ஆய்வாளர் ரொபேர்ட் அன்ரனி அவர்களின் மார்ச் 13ம் திகதிய வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்த “தனியார் கடன் வழங்குநர்களின் யோசனையை இலங்கை ஏற்குமா?” என்ற ஆய்வுக்கட்டுரையில் “கடந்த வருடம் (2023) நவம்பரிலேயே அனைத்துலகத் தனியார் கடன் வழங்குநர்கள் சிறிலங்காவின் அனைத்துப் பிணைமுறிகளையும் மீளப்பெற்று 2027 நவம்பரில் இருந்து 2036 இல் முதிர்ச்சி அடையக்கூடிய புதிய 10 பிணைமுறிகளை 2026 டிசம்பர் மாதத்தில் தாம் வழங்கவும், 20வீதக் கடனை மன்னிக்கவும், வட்டிவீதத்தைக் குறைக்கவும் யோசனை வழங்கியதை விளக்கியுள்ளார். இந்த வட்டி வீதக் குறைப்புப் பொறிமுறை சிறிலங்காவின் பொருளாதாரம் அடுத்த சில வருடங்களில் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியில் 93 பில்லியன் டொலர் முதல் 96.4 பில்லியன் டொலர் வரை பெற்றால் கடன் வட்டிவீதத்தை 2.5 வீதமும், 93 பில்லியன் டொலர்களுக்குக் குறைவாகப் பெற்றால் 4.5 வீதமும், 89.5 பில்லியன் டொலர்களுக்குக் குறைந்தால் 6 வீதமாகவும் அமையும் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதற்குச் சிறிலங்கா இணங்கினால் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்து மொத்தத் தேசிய உற்பத்தியைப் பெருக்கி நாட்டைக் கடனிலிருந்து மீட்டல் என்ற செயற்திட்டம் செயலிழக்க நேரும். வட்டிக்கு உழைத்துக் கொடுப்பவர்களாக நாட்டின் மக்களின் உழைப்பு மாற்றம் பெறும். கடன்தொகை தீர்க்கப்பட முடியாதவொன்றாக என்றும் தொடரும். இதனால் சிறிலங்கா இதற்கான தனது இணக்கத்தை வழங்கினாலும் ஆபத்து வழங்காது விட்டாலும் ஆபத்து என்ற நிலையில் தவிக்கிறது. இந்நேரத்தில் புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் இந்த தனியார் கடன் வழங்குநர்களை அணுகி ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்யும் சிறிலங்காவின் மக்கள் மேலான போருக்கு ஆயுதங்கள் கொள்வளவு செய்யவும் படைகளைப் பேணவுமே சிறிலங்கா அதிகளவு பணத்தைக் கடனாகப் பெற்றது-பெறுகிறது, என்ற உண்மையை விளக்கி ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையிலான தீர்வை சிறிலங்கா மேற்கொள்ள வேண்டும் என்பதை கடன் மறுசீரமைப்புக்கான இலக்காக வைக்க வலியுறுத்த வேண்டும் என்பதும் இலக்கின் இவ்வார எண்ணம்.

Exit mobile version