Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழரின் இறைமையை முன்னெடுக்காது ஈழத்தமிழர்கள் அரசியல் செய்வது மாற வேண்டிய நேரம் | ஆசிரியர்...

ஈழத்தமிழரின் இறைமையை முன்னெடுக்காது ஈழத்தமிழர்கள் அரசியல் செய்வது மாற வேண்டிய நேரம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 277

‘இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் காணப்படும்போது இரண்டு தீவிரப்போக்குகள் காணப்படுவதை நாங்கள் காண்கின்றோம். ஒரு தரப்பினர் குறைந்தளவு அதிகாரப் பரவலாக்கலை கூட ஏற்கத் தயாரில்லை இன்னுமொரு தரப்பினர் தீவிரவாத போக்குடையவர்கள் புலம் பெயர் தமிழர்கள் அவர்கள் தனிநாட்டைக் கோருகின்றனர். இந்த இருதரப்பினருக்கும் மத்தியில் சமநிலையைக் காண்பதற்குப் பிரித்தானியா உதவமுடியுமா? எனப் பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான தூதுவர் அன்ரூ பற்றிக் அவர்கள் டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு “இலங்கை மக்களிடம் பேசுவதே முதல் விடயம் என நான் தெரிவிப்பேன். எவரும் தனிநாடு குறித்து இலங்கைக்குள் பேசுவதை நான் காணவில்லை-செவிமடுக்கவில்லை-விவாதங்களையும் காணவில்லை. 13வது திருத்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதிகாரப் பரவலாக்கல் என்றால் என்ன என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. 13வது திருத்தம் மூலமான குறிப்பிட்ட அளவு அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய ஐக்கிய இலங்கை என்பதிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதே இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது” எனப் பிரித்தானியத் தூதுவர் பதிலளித்துள்ளார். இதன்வழி பாரத் லங்கா கூட்டாண்மையின் முடிவுகளே ஈழத்தமிழரின் இறைமையை மேலும் ஒடுக்கும் முறையில் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான சமகாலத் தீர்வாக இந்திய அமெரிக்க பிரித்தானிய கூட்டணியால் ஈழத்தமிழர்கள் மேல் திணிக்கப்படும் என்பது தெளிவாகிறது. ஈழத்தமிழரின் அரசியல்வாதிகளும் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழரின் அமைப்புக்களும் ஈழத்தமிழர் இறைமையை முதன்மைப்படுத்தாது அரசியல் செய்து வருவதன் விளைவே இந்திய-அமெரிக்க-பிரித்தானிய கூட்டணியின் இந்த நிலைக்குக் காரணம்.
மேலும் ஐக்கியயநாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஜெனிவா தீர்மானத்துக்கு அனுசரணை நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவின் தூதுவரே அவருடைய செவ்வியில், “சிலவேளைகளில் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் விதம் குறித்து நான் சிறியளவு கரிசனை கொண்டுள்ளேன். சர்வதேச சமூகம் இலங்கை விடயங்களில் தலையிடுகின்றதாவென” எனக் கூறியுள்ளமையும், “மனித உரிமைகள் நிபுணர்கள் செயற்பாட்டாளர்களிடம் நீங்கள் பேசினால் சிறிலங்காவினர் சீர்திருத்தங்கள், மற்றும் யுத்தத்தின் பாரம்பரியத்திற்கு தீர்வைக் காண்பதற்கான விடயங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பங்களிப்பில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்கின்றனர். சிறிலங்கா மீது தனது கருத்துக்களைத் திணிப்பது சர்வதேச சமூகமில்லை” எனக் கூறியுள்ளமை, ஈழத்தமிழ் அரசியல் வாதிகளும் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர் அமைப்புக்களும் இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஈழத்தமிழர்களுக்காகக் கடும்பணியாற்றினாலும் ஈழத்தமிழர் இறைமையை இவர்கள் முதன்மைப்படுத்தாமையால் சிறிலங்காவின் இறைமைக்குள் வாழும் சமூகமாக ஈழத்தமிழர்களை உலகு பார்க்கும் நிலை தோன்றியுள்ளமை உறுதியாகிறது.
கூடவே “கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் வெளியான அறிக்கையை வாசித்து பார்த்தால் அது அரசாங்கம் முன்னேற்றம் காண்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறது அதே வேளை இன்னமும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதை வலியுறுத்துகின்றது” என்ற பிரித்தானியத் தூதுவரின் கூற்று இனிமேல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் வெளியகப் பொறிமுறைகள் மூலம் அனைத்துலக சட்டத்தைச் சிறிலங்காவில் மனித உரிமைகள் வழிமுறைகளில் செயற்படுத்துவதற்குப் பதிலாக வாய்மொழியளவிலான கண்டனங்கள் நெறிப்படுத்தல்களையே சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைக்கு அளிக்கும் என்பதை எதிர்வு கூறியுள்ளது. இதற்கு உரிய நேரத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் வெளியகப் பொறிமுறைக்கு அனுமதிக்காது சிறிலங்காவின் உள்ளக பொறிமுறைகளுள் தீர்வு என வழிகாட்டிய திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முதல் இனஅழிப்பு என்பதை வலியுறுத்தக் காலந்தாழ்த்திய அனைத்துலக ஈழத்தமிழர் அமைப்புக்கள் வரை அத்தனைபேருமே பொறுப்பாக உள்ளனர்.
பிரித்தானியத் தூதுவர் இலங்கையில் ஆறுமாதமே பணிபுரியும் புதியவராக இருப்பினும் உண்மையும் நேர்மையுமான முறையில் தான் இலங்கையில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் நிபுணர்களுடன் பேசியதில் சிறிலங்காவுக்கு மனித உரிமைகள் ஆணையகம் அனுப்பிய கடிதங்கள் என்பவற்றைப் பார்த்தால் இந்த விடயம் குறித்து போதியளவு கலந்தாலோசனைகள் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது தனக்குப் புலனாகிறது எனக் கூறியுள்ளார். கூடவே கடந்த காலத்தில் இது தொடர்பாக ஆராய்ந்த குழுக்களின் அறிக்கைகள் வெளியாகவும் இல்லை வெளிப்படுத்தப்பபடவுமில்லை. நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. இதனால் அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் பலனளிக்குமா என்பதில் சமூகத்தில் சந்தேகம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் எனக் கூறியுள்ளார். அத்துடன் பரந்து பட்ட மக்களுடனும் கலந்துரையாடியதில் மக்களது ஆதரவும் இதற்கு இல்லையென உணர்ந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியத் தூதுவரின் இந்தக் கூற்றைத் தொடக்கப்புள்ளியாக வைத்து ஈழத்து அரசியல்வாதிகளும் புலத்து அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் 2009 முதலான கடந்த பதினைந்தாண்டு கால மனித உரிமைகள் வன்முறைகள் குறித்த தரவுகளையும் தகவல்களையும் தொகுத்து வகைப்படுத்தி அவை ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டன என்பதை உறுதி செய்து சட்டவிசாரணைக்கு உரிய ஆவணமாக்கும் பணியிலாவது பொதுவெளியில் இணைந்து பணியாற்றுவார்களானால் அதுவே ஈழத்தமிழர் தங்களின் இறைமையை மீளமைத்தலே அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் ஏற்படுத்த வல்ல தீர்வுக்கு இட்டுச் சென்று, 13 ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாக அமையாது என்பதை உலகுக்கு உணர்த்தும் என்பது இலக்கின் உறுதியான எண்ணம். அத்துடன் ஈழத்தமிழர்கள் ஈழத்தமிழரின் இறைமையை முன்னெடுக்காது அரசியல் செய்வது மாற வேண்டிய நேரம். தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஈழத்தமிழர்கள் கட்சிகளின் தேர்தல் கொள்கை விளக்கத்தில் ஈழத்தமிழரின் இறைமையை மீள்விக்க கட்சிகள் எவ்வாறு உதவுமென கட்சிகளுடன் உரையாடினால் மட்டுமே ஈழத்தமிழரின் இறைமையைச் சிறிலங்கா ஒடுக்குவதைத் தடுக்கலாம்.

Exit mobile version