Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் தேசியத்தலைவரின் இறைமை மீதான பிடிவாதம் ஈழமக்களின் பிடிவாதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நேரம் | ஆசிரியர் தலையங்கம்...

தேசியத்தலைவரின் இறைமை மீதான பிடிவாதம் ஈழமக்களின் பிடிவாதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நேரம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 250

தேசியத்தலைவரின் இறைமை மீதான பிடிவாதம் ஈழமக்களின் பிடிவாதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நேரம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 250

ஜி 20 உச்சிமாநாடு அதன் தலைமையாக இவ்வாண்டில் விளங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவில் இம்மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் சீனா இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் அக்சாய்சின் எல்லைப்பகுதிகளைத் தனது வரைபடத்துள் உள்ளடக்கிய புதிய நிலையான வரைபடமொன்றை தனது சீன இயற்கைவள அமைச்சால் ஆகஸ்ட் 28 இல் வெளியிட்டுள்ளது. இது உண்மையற்ற பதிவுகள் என்று வன்மையாகக் கண்டித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் அவர்கள்  “இந்தியாவின் சில பகுதிகளுடனான வரை படங்களை முன்வைப்பதன் மூலம் எதிலும் மாற்றம் ஏற்படாது. எமது பிரதேசம் என்பதில் எமது அரசாங்கம் மிகத்தெளிவாக இருக்கும். உண்மையற்ற உரிமைக்கோரல்களைச் செய்வது மற்றவர்களுடைய பிரதேசங்களை அவர்களுடையதாக ஆக்காது” எனவும் எடுத்துரைத்துள்ளார்.

இவ்விடத்தில் மாண்பமை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு ஈழத்தமிழர்களுக்கு இலங்கைத்தீவில் அவர்களது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட  இறைமையுள்ள அவர்களின் பிரதேசங்கள் குறித்தும் இதேநிலைப்பாட்டையே ஈழத்தமிழர்களின்  தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது பிடிவாதமாகக் கொண்டிருந்தார் என்பதை இந்நேரத்தில் எடுத்துரைக்க விரும்புகின்றோம். பிரபாகரனின் உறுதியான நிலைப்பாடான ஈழத்தமிழர்களின் தாயகம் அவர்களுடையது. இறைமையுள்ள தன்னாட்சி ஒன்றின் மூலமே ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் நடைமுறைச்சாத்தியமாகும் என்பதே, மண்மீட்பு போராக 31 ஆண்டுகள் சீருடை அணிந்த முப்படைகள் சட்டவாக்கம் சட்ட அமுலாக்கம் நிர்வாகம் என்ற ஒரு தேச அரசுக்குரிய அத்தனையும் கொண்ட நடைமுறையரசாக இலங்கைத் தீவுக்குள் இரு அரசுகள் என்ற அதன் இயல்பான வரலாற்று நிலையை உலகுக்கு வெளிப்படுத்தியது. இது பிரிவினையல்ல காலனித்துவத்திடம் இழந்த இறைமையின் மீட்டுருவாக்கம். இந்த மீள் தேசநிர்மாணத்துக்கு உலக அங்கீகாரத்தை ஈழமக்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில், 17.05. 2009 சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினவழிப்பின் மூலமான 146000 ஈழத்தமிழ் மக்கள் தேசமாக இனப்படுகொலைக்கு உள்ளாகும் வரை ஈழமக்கள் வேண்டி நின்றனர். அதன் பின்னர் துப்பாக்கிகள் மௌனித்த நிலையில் சனநாயகப் போராட்டங்களின் வழி இன்றும் அதே அங்கீகாரத்தையே உலகநாடுகள் உலக அமைப்புக்களிடம் வேண்டி நிற்கின்றனர். இதனை இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மனதிருத்திச் செயற்பட வேண்டும்

ஈழமக்கள் இறைமையுடன் கூடிய தன்னாட்சி உரிமை உள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்திச் சிங்கள அரசபயங்கரவாதம் உருவாக்கிய அதன்படைபல ஆக்கிரமிப்பு மூலமான உயிர், உடைமைகள், நாளாந்த வாழ்வுக்கான இனவழிப்புப் போர் மூலமான இனங்காணக்கூடிய அச்ச வாழ்வில் இருந்து தங்களை ஆயுத எதிர்ப்பின் மூலமாகப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு முறைமைகளை முன்னாள் இந்தியப் பிரதமர் மாண்பமை இந்திராகாந்தி அவர்களே பயிற்சிகள் மூலமும் ஆயுதவழங்கல்கள் மூலமும் தொடக்கி வைத்தார்.

இந்தியாவே 1983ம் ஆண்டு சிறிலங்காவின் யூலை ஈழத்தமிழின அழிப்பை அடுத்து ஆர்ஜென்டினா மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈழத் தமிழர் தேசிய பிரச்சினையை முதன் முதலில் கொண்டு சென்றது. சிறிலங்காவின் இறைமையை மீறி அதீத மனிதாய தேவையில் இருந்த ஈழத்தமிழர்களுக்கு வான் மூலம் உணவு வழங்கலை இந்தியா செய்ததின் மூலம் இந்தியாவை ஈழத்தமிழர்கள் தங்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கான துணையாகக் கருதியே தங்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆரம்பத்தில் கட்டி எழுப்பினார்கள்.

இவற்றினை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தியா ஈழத்தமிழர்களின் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாக்கும் பிராந்திய வல்லாண்மையாகவே இந்திராகாந்தி அம்மையார் மூலம் உலகுக்குத் தன்னை வெளிப்படுத்தியது. இதனாலேயே அவரது மறைவுக்குப் பின்னரும் ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் பயணத்தில் திம்புப் பேச்சுவார்த்தையை ஈழப்போராளிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஏற்றுக்கொண்டனர்.

  1. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக்கட்டமைப்பைக் கொண்டவர்கள்
  2. தமிழ் மக்களுக்கு இனம் காணக்கூடிய தனித்துவமான தாயகம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
  3. தமிழர் தேசத்திற்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்
  4. சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமையும் மற்றும் அடிப்படையான உரிமைகளும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவே திம்புப்பேச்சுவார்த்தை முடிவுகள். இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இலங்கையில் இனஅழிப்பு நடந்துள்ளது என ஏற்றுள்ள இன்றைய காலகட்டத்திலும்  இந்தியா தான் உறுதிப்படுத்திய இம்முடிவுகளின் அடிப்படையில் அரசியல் தீர்வுகளுக்கு உதவுகையிலேயே இந்தியப் பிரதமர் கூறுகின்ற இலங்கையில் தமிழர்களுக்கான கண்ணியமான வாழ்வை இந்தியாவால் உருவாக்க முடியும் என்பது ஈழத்தமிழர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது என்பதை இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இவ்விடத்தில் ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சுதுமலையில் தங்கள் ஆயுதங்களை இந்தியாவிடம் கையளித்த போது நிகழ்த்திய உரையின் சில பகுதிகள் மீள் நினைவு செய்யப்படுவது இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களின் முக்கியத்துவத்தை உணர உதவும். “நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நாம் நேசிக்கின்றோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை.

எமது எதிரியிடமிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவ வீரர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதில் இருந்து ஈழத்தமிழர்களின் ஒவ்வொரு உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக் கூறவிரும்புகிறேன்.

இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. …….. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு.

தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன. போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எமது இலட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்”

இந்த தேசியத்தலைவர் அவர்களின் உறுதி பிடிவாதம் இன்று இந்தியா அமெரிக்கா சீனா என்ற முக்கோண உலகச்சட்டகத்துள், வளர்ந்து வரும் புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்துலக பிரச்சினையாக ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை புதிய பரிமாணம் பெற்று, எல்லா வல்லாண்மைகளும் ஈழத்தமிழரை அணுகும் இன்றைய நிலையில்  ஒவ்வொரு ஈழத்தமிழரதும் எண்ணமாகச் சொல்லாகச் செயலாக உலகுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதே ஈழத்தமிழர் இறைமை பேணப்படும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.

Exit mobile version