Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சமூகப் பிரச்சனையல்ல இறைமைப்பிரச்சினையென நாடுகளுக்கு தெளிவாக்கப்படவேண்டும் | ஆசிரியர் தலையங்கம் |...

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சமூகப் பிரச்சனையல்ல இறைமைப்பிரச்சினையென நாடுகளுக்கு தெளிவாக்கப்படவேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 247

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சமூகப் பிரச்சனையல்ல இறைமைப்பிரச்சினையென நாடுகளுக்கு தெளிவாக்கப்படவேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 247

சிறிலங்காவின் அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 15.08.2023 மீளவும் அனைத்துக்கட்சியினருடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின் முதன்மை நோக்கம் ‘தேச இனம் ஈழத்தமிழர்கள் என்பதை மாற்றிச் சிறிலங்காவின் ஒரு ‘சமூகம்’ என மீள்வரைவுசெய்து, அவர்களின் பாதுகாப்பு அவர்களின் இறைமையுடள் கூடிய தன்னாட்சி உரிமையின் வழியான மாகாண பொலிஸ் முறையினூடு அமைவதை மறுத்தலாக அமையவுள்ளது.
இச்சந்திப்பின் துணை நோக்கமாக நிலப்பயன்பாட்டைப் பேணிப் பாதுகாப்பு அளிக்கும் உரிமையை மாகாணசபைக்கு இல்லாது செய்வதன் மூலம் தற்போது தமிழர் தாயகங்களில் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் வரை நடைபெற்று வரும் பௌத்த சிங்கள குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை நில ஆக்கிரமிப்பபு மூலம் அமைத்தல் என்ற அரசபயங்கரவாதத்துடன் கூடிய அனைத்துலகக் குற்றச் செயல்களை தடுக்க இயலாத நிர்வாகப் பரவலாக்கலை வழங்குவதற்கான அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவுகளை அரசியல் கட்சிகள் வழி பெறுதல் என்பதாக அமையவுள்ளது.
ஈழத்தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் சமூகப் பிரச்சினையாக மாற்றப்படும் ஈழத்தமிழர் இறைமைப் பிரச்சினை என அரசியல் ஆய்வாளர்கள் கூட்டிக்காட்டும் அளவுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்ந்த மற்றைய ஈழத்தமிழ்ச் சிறிலங்காப் பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் சிறிலங்கா அரசத்தலைவருடன் உள்ளே பலத்த நல்லுறவும் உதட்டில் சிறிய முணுமுணுப்பும் உடையவர்களாகத் தங்கள் பிரதிநிதித்துவக் கடமைகளைச் செய்துவருகின்றார்கள். இவர்கள் அனைவரும் பொதுவெளியில் ஒருங்கிணைந்து ஒரே குரலாக ஒலித்தால் மட்டுமே ரணிலின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தமிழர் தாயக நிலங்களை நாள் தோறும் பௌத்தமயப்படுத்தல் சிங்கள மயப்படுத்தல் செய்யும் இன்றைய இனத்துடைப்பு முயற்சிகளை முறியடிக்க முடியும்.
சிறிலங்காவின் சட்டத்துறைப் பேராசிரியர்களுள் முக்கியமானவரும் பல அமைச்சர் பதவிகளைச் சிறிலங்கா அரசாங்கங்களில் வகித்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அவர்களே 13வது திருத்தம் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளவொன்று அதனை நிறைவேற்று அதிகாரமுள்ள அரசத்தலைவரும் சட்டவாக்கத்துறையும் சட்ட அமுலாக்கத்துறையுமே நடைமுறைப்படுத்தப் பொறுப்பானவர்கள் அப்படியிருக்க இன்றைய அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா அதனை நடைமுறைப்படுத்தப் பாராளுமன்றமே அதிகாரம் அளிக்க வேண்டுமென்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதென்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். இனியாவது தமிழ் அரசியல்வாதிகளும் உலகுக்கு உண்மையைப் பேசுவார்களாக.
மேலும் பேராசிரியர் ஜி. எல் .பீரிஸ் சிங்களம் படித்தோர் குழாத்தினர் வேறு நாடுகளுக்குப் பெருமளவில் புலம்பெயரத் தொடங்கியுள்ளமை நாட்டுக்கான நீண்டகாலப் பேராபத்தாக அமையுமென எச்சரிப்பும் விடுத்துள்ளார். ஆனால் இந்தச் சட்டமாமேதை ஈழத்தமிழ் மக்களின் தொகையில் அரைவாசியானவர்கள் சிங்கள அரசாங்கங்களின் ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளால் கடந்த 67 ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்து வருவது குறித்து இவ்வாறான ஒரு கருத்துக் கூடத் தெரிவிக்காதது இவரின் அறிவுசார் நேர்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதை உலகு உணரவைத்துள்ளது. அவருடைய நேர்மை மட்டுமல்ல தமிழ் அரசியல்வாதிகளும் இதுவரை ஈழத்தமிழர் புலப்பெயர்வு நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேசாமல் தங்கள் நேர்மையையும் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இந்த ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வே இலங்கைத் தீவின் பொருளாதார வங்குரோத்து நிலைக்கான தலைமைக்காரணியாக இன்று வரை தொடர்கிறது.
அத்துடன் ஈழத்தமிழர்களை இனஅழிப்புச் செய்வதற்கு படைகளை நிலைப்படுத்தவும் ஆயுதங்களையும் நவீன போர்க்கருவிகளையும் வாங்கிக் குவிக்கவும் இன்றுவரை சிறிலங்கா செலவழித்து வரும் இலங்கைத் தீவின் அனைத்து மக்களதும் உழைப்பின் வரிப்பணங்களதும் நிகர இலாபங்களதும் வீணடிப்பே, தற்போதும் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையாக முதல் ஐந்து மாதங்களிலேயே 100000 கோடி ரூபாவைத் தாண்டியுள்ளமைக்கான காரணியாக உள்ளது.
அனைத்துலக நாணய நிதியத்தின் நிபந்தனைகளையோ அல்லது கடன்வழங்கியவர்களது நம்பிக்கையையோ இதுவரை உறுதியாகப் பூர்த்தி செய்யாத நிலையில் செப்டெம்பரில் அனைத்துலக நாணய நிதியத்தின் இரண்டாவது நிதிஉதவியைப் பெற இயலாத நிலையேற்படும். இந்நிலையிலும் கூட பொருளாதார வளர்ச்சிக்கான இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை உண்மையும் நேர்மையுமான முறையில் முன்னெடுக்கச் சிறிலங்காவுக்கு எந்த விருப்புமில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்நிலையில் மக்களுடன் மக்கள் தொடர்பென்ற உத்தியின் வழி ஈழத்தமிழருடன் உலகநாடுகள் தொடர்புகளை மேற்கொள்வது சமகாலப்பிரச்சினைக்கான தீர்வுகள் பலம்பெற வழிவகுக்கும். அத்துடன் வடபகுதி வரட்சியால் தாக்கப்பட்டுள்ள நிலையில் மனிதாய உதவிகளையும் உலக நாடுகள் சிறிலங்காவின் இறைமையை மீறி உதவ இது உதவும்.
அதே வேளையில் இலங்கைத் தீவில் பிரிக்ஸ் நாடுகள் எனப்படும் பிரேசில் ரஸ்யா இந்திய சீன தென்னாபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு இலங்கைத் தீவில் தங்கள் தங்கள் நாட்டுப் பணங்களில் தங்கள் வர்த்தகத்தை வழக்காக்குவதன் மூலம் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி மாற்றப் பெறுமதியை நிலைப்படுத்தும் ‘கோட்டட் மணி’ என ஆங்கிலத்தில் சுட்டப்படும் விதந்துரைக்கப்பட்ட பணமாக உலக முதன்மை வகிக்கும் நிலையை மாற்ற முயல்வதன் வழி சமகாலத்திற்கான புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையை அமெரிக்காவை மையப்படுத்திய முனைவாக்கநிலையில் நின்று மாற்றி பன்நாட்டு பன்முகநிலையாக மாற்றுவதற்கான பகீரதப்பிரயத்தனங்களைச் செய்து வருகின்றன.
இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருநாட்டுக்கும் அவர்கள் இன்றைய தேவைகளுக்கு உதவும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பதை தெரியப்படுத்தி அவர்களுடன் நல்லுறவுகளை வளர்க்க முற்பட வேண்டும். இதற்கு ஈழத்தமிழர்கள் இன்றைய உலக அறிவுசார் பொருளாதாரத்திற்குத் தாங்கள் பங்களிக்க ஆயத்தமாக இருப்பதை பொருளாதார வர்த்தக பேரமைப்புக்களை உருவாக்கி உலகிற்கு உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறே உலக நாடுகள் பலவற்றினதும் குடிகளாகத் தாங்கள் வாழ்கின்ற நிலையில் தங்கள் உழைப்பின் மிகுதியை ஒருங்கிணைத்து கூட்டொருங்கான நிதிய அமைப்பின் மூலம் அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உலக நாடுகள் தங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்ய வேண்டும். இவைகளே இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையில் உலகம் அக்கறை கொள்ள வைப்பதற்கான வழிகளாக உள்ளன.
அதேவேளை இந்தியா இலங்கையில் தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கான அதன் தொடக்கப்புள்ளியாக 1987ம் ஆண்டு இலங்கை இந்திய அனைத்துலக உடன்படிக்கையின் வழியாகச் சிறிலங்காவின் அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தத்தை முழுஅளவில் நடைமுறைப்படுத்த அழைப்பு விடுத்து உலகநாடுகள் அமைப்புக்கள் ஈழத்தமிழரின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் இலங்கையில் தலையீடு செய்வதை தடுக்க முயல்கையில் ரணில் விக்கிரமசிங்காவோ தேவையற்ற பாராளுமன்ற அங்கீகாரம் என்பதை முன்னிறுத்தி 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மறுப்பது உலக நாடுகள் தலையீடு செய்வதற்கான நிலையை உருவாக்குமென இந்தியாவைக் கருதவைக்கிறது. அதன் பதில் வினையாகவே தமிழ்நாட்டுப் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களால் “என் மண் என் மக்கள்” என்னும் கச்சைதீவு மண்மீட்பு பாதயாத்திரை ஜனவரி 11 வரை தொடரவென ராமேஸ்வரத்தில் தொடங்கியது. இதில் உரையாற்றிய இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இலங்கையில் தமிழருக்கு நடைபெற்றது இனஅழிப்புத்தான் என்ற பொருள்படப் பேசியும் ‘டுவிட்’ செய்தும் சிறிலங்காவுக்கான முதலாவது எச்சரிப்பை விடுத்துள்ளார்.
தமிழகத் தேர்தல் களத்தையொட்டிய வாக்குறுதிப்பாட்டு முயற்சியாக இதனை உள்நாட்டு நிலையில் பார்த்தாலும் வெளிநாட்டு நிலையில் கிழக்கிலும் மலையகத்திலும் தன்னிச்சையான நிலையிலும் வடக்கில் நட்புறவு நிலையிலும் இறைமைப் பகிர்வை ஏற்கனவே நடைமுறை அரசியலாக்கியுள்ள இந்தியா தனது நெறிப்படுத்தலுக்கு அப்பால் சிறிலங்கா செயற்படுவதை இலகுவில் பொறுத்துக்கொள்ளாது என்பது இப்போது தெளிவாகிறது.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய தன்னாட்சி அடிப்படையிலான தீர்வே ஈழத்தமிழர் இந்திய நட்புறவுக்கும் பரஸ்பர பாதுகாப்புடனான அமைதி வாழ்வுக்கும் வளர்ச்சிகளுக்கும் அடித்தளம் என்பதை புலம்பெயர் தமிழர்கள் இந்தியாவுடனான உரையாடல் மூலம் தெளிவாக்க வேண்டுமென்பதே இலக்கின் எண்ணமாகவுள்ளது.

Exit mobile version