Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் இறைமையுள்ள ஈழத்தமிழரை சமூகமாக மடைமாற்றம் செய்த சிங்கள மேதினக் கூட்டங்கள் | ஆசிரியர் தலையங்கம்...

இறைமையுள்ள ஈழத்தமிழரை சமூகமாக மடைமாற்றம் செய்த சிங்கள மேதினக் கூட்டங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 285

இறைமையுள்ள ஈழத்தமிழரை சமூகமாக மடைமாற்றம் செய்த சிங்கள மேதினக் கூட்டங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 285

மே தினம் என்பது உலகப் பொதுமையில் தொழிலாளர் உரிமைக்குரல். ஆனால் சிறிலங்காவில் மே தினம் என்பது உட்கட்சிப்பூசல்களில் தம்கட்சிக்கே மக்கள் பலம் உண்டெனப் பார்ப்பவரை மயக்கி வரவிருக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கான பரப்புரைக் களமாகவே முன்னெடுக்கப்பட்டது.
இந்த மே தினக் கூட்டங்களில் இலங்கைத் தீவின் முக்கிய பிரச்சினையாகவுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையைக் கொண்டுள்ள ஈழத்தமிழர்களின் தேசியப்பிரச்சினையான அவர்களின் இறைமையின் அடிப்படையிலான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுக்கான வாழ்வியல் பாதுகாப்புக் குறித்த அரசியல் தீர்வுக்கான எதுவிதமான கருத்துக்களும் பேசப்படவில்லை. அதற்கு மாறாக பிரித்தானிய காலனித்துவம் தன்னிச்சையாகத் தனது நலனுக்காக அடையாளப்படுத்திய ஈழத்தமிழர்கள் சிறுபான்மை இனம் (Ethnic minority) என்ற வகைமைப்பாடு ஈழத்தமிழருக்கு அளிக்கக் கூடிய அனைத்துலகச் சட்டப் பாதுகாப்பையும் நீக்கி அவர்கள் சிறுபான்மை சமுகம் (Community) எனச் சகல சிங்களக் கட்சிகளாலும் அழைக்கப்படும் பழக்கத்தை இம்மேதினம் வழக்கமாக்கியது. ஈழத்தமிழர்கள் சமுகம் சிங்கள பௌத்த நாட்டில் அதன் இரண்டாந்தரக் குடிகளாகத் தம் சமுக பொருளதார அரசியல் ஆன்மிக வாழ்வை வாழ்வதற்குக் கட்டாயப்படுத்தப்படுகையில் எந்த அனைத்துலகச் சட்டமும் சிறிலங்காவின் இறைமையை மீறி அவர்களுக்கு உதவ இயலாத சட்ட மேலாண்மையைச் சிறிலங்கா நடைமுறையில் பெறுவதற்குத் திட்டமிட்ட முறையில் இது செயற்படுத்தப்பட்டுள்ளது. கூடவே இது சிறிலங்காவில் காணப்படும் சட்டத்தின் முன் அனைவரும் சமமற்றவர்கள் என்ற ஆட்சி முறையை நியாயப்படுத்தும் செயற்பாடாக அனைத்துச் சிங்களக் கட்சிகளாலும் அவற்றின் மேதினக் கூட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் தேசிய மக்கள் சக்திக் கட்சிக்கே அதிகளவில் மேதினத்தில் பங்கேற்றனர் என்பது ஊடகங்கள் தரும் செய்தியாகவுள்ளது. இந்த மக்கள் ஆதரவுப் பெருக்கமே அமெரிக்க மேற்குலக இந்திய நாடுகளினதும் அவர்களது ஆதரவு நாடுகளினதும் கூட்டு மூலம் சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்திக் கட்சியினரை இவர்களின் சிறிலங்காவுக்கான தூதுவர்கள் அனைவரும் சென்று சந்தித்து வருவதன் உட்பொருளாகவுள்ளது. கூடவே தங்களின் நாடுகளுக்கு அமெரிக்கா இந்தியா கனடா சுவீடன் என அழைத்துப்பேசியும் வருகின்றனர். கடந்த வாரத்தில் கூட நோர்வேயின் தூதுவர் தேசிய மக்கள் சக்தி கட்சியினருடன் பேச்சு நடாத்தியுள்ளார். இவர்கள் சிறிலங்காவில் நிலவும் வறுமை, வேலையின்மை, உணவின்மை நாளாந்த வாழ்வின்மை என்பன சிங்கள வாக்காளர்களை தேசிய மக்கள் சக்திக் கட்சிக்கு வாக்களிக்க வைத்து அவர்களின் தலைமையில் சிறிலங்கா வருமானால் அவர்கள் தங்களின் அரசியலின் பிறப்பு நிறமான சிவப்பு வண்ணத்துள் மூழ்கிவிடலாம் என்ற அச்சத்தில் அதனைத் தடுக்கப்படாதபாடு பட்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை உருவாக்க மூலவர்களே தேசிய மக்கள் சக்திக் கட்சியினரை தேடிச்சென்று பேசியுள்ளமை அமெரிக்க மேற்குலக இந்தியக் கூட்டு நாடுகளுக்குப் பலத்த அச்சத்தை அளிக்கிறது.
அத்துடன் சீனா சிறிலங்காவின் பிரதமரை தன்னுடன் செய்த ஐந்து ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டு வருமாறு பலத்த அழுத்தங்களையும் கொடுத்து வருகிறது. அதே வேளை அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் தனது தேர்தலுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் யப்பானும் ரஸ்யாவும் இந்தியாவும் பொருளாதாரத்தில் ஏன் தடுமாறுகின்றார்கள் என்றால் அவர்கள் இனவெறி கொண்டவர்கள் அவர்களிடம் அந்நிய வெறுப்பு அதிகமாகவுள்ளது என்று பேசியுள்ளமையும், அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்து வேவு பார்த்த இரு றோ அமைப்பினரை அவுஸ்திரேலியா வெளியேற்றியது என அமெரிக்க ஊடகப் பின்னணியில் வெளிவந்த செய்திகளும் ஏற்கனவே கனடாவின் நிலையும் இந்திய அமெரிக்கப் போட்டிகளும் தொடர்கதையாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனால் இந்தியா தனது பாதுகாப்பு குறித்த விடயங்களில் குறிப்பாக அயலகத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டிய தேவை இயல்பாகிறது. இதனால் பாரதிய ஜனதா கட்சியின் வெளிவிவகார பிரிவின் பொறுப்பாளர் தனது நட்பு நாடுகளான பத்து நாடுகளின் பதினெட்டுக் கட்சிகளின் பிரதிநிதிகளை டில்லிக்கு அழைத்து நேரடிப் பேச்சுக்களில்
ஈடுபட்டுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் கூட்டான பொதுஜனபெரமுனையையும் மட்டும் டில்லி அழைத்துள்ளது. இது யார் வென்றாலும் அவர்களுடன் இணைவாகப் பயணித்தே இந்தியா தனது மேலாண்மையை இலங்கைத்தீவில் தொடர்வதற்கான ஆயத்தங்களுடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. அதே நேரம், சிங்கள மேதினக் கூட்டங்களில் சஜீத் பிரேமதாசா நேரடியாகவே 13 வது திருத்தத்தை முழுமையாகவே நடைமுறைப்படுத்துவேன் என இந்தியாவைத் தானும் திருப்திப்படுத்த, அநுரகுமாரவோ பல்லின நாடாக அனைவரும் சமத்துவமாக அமையக் கூடிய தீர்வு முறையை உருவாக்குவதுதான் தமது கட்சியின் நோக்கு என்றாலும் தமிழர் மாகாணசபையைத்தான் விரும்பினால் அதனைக் கொடுப்போம் எனத் தானும் இந்தியாவைத் திருப்திப்படுத்தி வருகின்றார்.
இவ்வாறாகச் சிங்களக் கட்சிகளின் மேதினச் செய்திகள் அமைகையில் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற மே தினக் கூட்டங்களும் ஜனாதிபதி தேர்தல் தங்கள் உட்கட்சிப் பிரச்சினைகள் என்பவற்றுக்கே சிங்களக்கட்சிகள் போல முக்கியத்துவம் கொடுத்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியாவில் நடத்திய மே தினக் கூட்டத் தீர்மானங்களே, தமிழ்த்தேச அங்கீகாரத்தையும், அதனுடைய தனித்துவமான இறைமையையும், தன்னாட்சி உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான தீர்வை இந்தியாவும் மற்றைய நாடுகளும் சிறிலங்காவிடம் வலியுறுத்த வேண்டுமென ஈழத்தமிழரின் அரசியல் குரலாக ஒலித்தது. மேலும் மலையகத் தொழிலாளர்கள் உரிமைகள், தமிழ்த்தேச விவசாயிகள் உரிமைகள், ஈழத்தமிழ் மீனவர் பிரச்சினைகள் அவரவர்கள் தங்கள் கடற்பரப்பில் சுதந்திரமாக மீன்பிடித்து வாழக் கூடிய வகையில் வெளிநாட்டு மீன்பிடித்தல் தடைசெய்யப்பட்டுத் தீர்க்கப்பட்டு மீனவர் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஈழத்தமிழரின் உழைப்பாளர் குரலாகவும் அமைந்தது. அத்துடன் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13வது திருத்தம் உட்பட்ட எந்தத் தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்கக் கூடாதெனவும் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழ்த்தேசம் தனது தன்னாட்சிக்கான உறுதியை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அழைப்பை விடுத்தது. கூடவே ஈழத்தமிழினத்தின் மேலான இனப்படுகொலைக்கு அனைத்துலக குற்றவியல் விசாரணைகள் வலிந்து காணாமல் குறித்த அனைத்துலக நீதிவிசாரணைகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு நிவாரணங்கள் அளிக்க வேண்டுமெனவும் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கை போரால் பாதிக்கப்பட்ட இடமாக அறிவித்து அனைத்துலக உதவிகளை பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அளிக்க வேண்டுமெனவும் கூடவே பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் முன்னாள் போராளிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான சிறப்பு உதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வற்புறுத்தியது. பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம், நீக்கப்பட்டு அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், ஊடகச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என நீதியின் குரலாகவும் ஒலித்தது. அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அலுவலகத்துக்கு கணக்காளர் ஒருவர் உடன் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தமிழர் தாயகத்தின் ஒருங்கிணைந்த தேவைகளையும் வலியுறுத்தியது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றலையும் தமிழ்த் தேசிய மக்கள் கட்சி முன்னெடுக்க வேண்டுமென்பது இலக்கின் எண்ணம். அப்பொழுதுதான் ஈழத்தமிழர்கள் தேச இனம் என்கிற வலிமை கொண்டு தேசமாக எழுவார்கள் என்பது இலக்கின் உறுதியான கருத்து.

 

Exit mobile version