Home நேர்காணல்கள் இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும் | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா

இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும் | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா

கோட்டாபயசட்டத்தரணி இளையதம்பி தம்பையா

கோட்டாபய பதவி விலக வேண்டும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரும் போராட்டங்கள் இலங்கை முழுவதும் தீவிரமடைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் இலங்கை அரசியல் களத்தில் என்ன நடைபெறுகின்றது? என்ன நடைபெறப் போகின்றது? என்பது தொடர்பில் பிரபல சட்டத்தரணியும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான இளையதம்பி தம்பையா அவர்கள் உயிரோடைத் தமிழின் தாயகக் களத்துக்கு வழங்கிய செவ்வியின் முக்கியமான  பகுதிகளை இந்த வாரம் இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி:
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி பதவி விலகுவதற்கான சாத்தியங்கள் உள்ளதா?

பதில்:
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பது மக்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் கூட அதனைத்தான் வலியுறுத்துகின்றன. இலங்கை அரசியலமைப்பின்படி இங்குள்ளது ஜனாதிபதியின் அரசாங்கம்தான். ஜனாதிபதி பதவி விலகுவதன் மூலமாக மட்டும்தான் இந்த அரசாங்கம் பதவி விலகியதாக கருத முடியும்.

ஆனால், ஜனாதிபதி தான் பதவி விலகப்போவதில்லை என்பதை உறுதியாக சொல்லி வருகின்றார். இதில் இக்கட்டான நிலை ஒன்றுள்ளது. ஆளும் கூட்டணியிலிருந்து 43 உறுப்பினர்கள் விலகிக்கொண்டதன் மூலமாக பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருந்த பெரும்பான்மை இன்று இல்லாமல் போயுள்ளது. இந்த நிலையில் பதவி விலகுவதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை. ஆனால், அதிகாரத்தை விட்டுச் செல்வதற்கு அவர் தயாராகவில்லை.

அதே வேளையில், அவரது நெருக்கிய உறவினர்களும், நெருக்கமாக இருந்த பலரும் நாட்டை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செய்தி உண்மையாக இருந்தால், அவர்கள் ஏன் இவ்வாறு வெளியேறுகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. எதிர்ப்புக்கள் மேலும் பலமாகலாம் என்ற அச்சம் இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது அதிகாரம் கைமாறினால் வரக்கூடிய ஆபத்துக்களுக்கு அவர்கள் தயாராவதும் காரணமாக இருக்கலாம்.

அதேவேளையில், மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கக்கூடிய – பொறுப்பெடுக்கக்கூடிய ஒரு அமைப்பு அல்லது தலைமை இல்லாமலிருப்பது பெரும் குறைபாடாகவுள்ளது. ஜனாதிபதி பதவி விலகுவாரா இல்லையா என்பது மக்களுடைய இந்தப் போராட்டங்கள் எந்தளவுக்கு உச்சமடைகின்றது என்பதிலும், இதற்கு தலைமை தாங்கக்கூடிய அமைப்பிலும்தான் தங்கியுள்ளது.

கேள்வி:
தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தினால் என்னதான் செய்ய முடியும்?

பதில்:
இந்தப் பிரச்சினை இந்த அரசாங்கத்தினால் மட்டும் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. உள்நாட்டுப் போர் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுப் பொருளாதார பின்னடைவுகள் இதற்கு பிரதான காரணம். இக்காலத்தில் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், வெளிநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பும் கிடைக்காத நிலை இருந்தது. உண்மையில் கடன் சுமைகள் இக்காலப் பகுதியில் இருந்துதான் ஆரம்பமானது. அதனைவிட 1977 க்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் தோல்வி, மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட சலுகைகள் என்பனதான் இந்த நிலைக்கு காரணம்.

அதேவேளையில் இந்த அரசாங்கம் ஒரு கையாலாகாத நிலைமைக்கு வந்திருக்கின்றது. அதற்குக் காரணம் – அவர்கள் பொருளாதாரத்தை சீர்குலைத் திருக்கின்றார்கள். அவர்களுடைய காலத்தில் காணப்பட்ட இந்த ஊழல் மோசடிகள் என்பனவும் இந்த நிலைமைக்கு காரணம்.

இப்போதைய நிலையில் இவர்கள் இரண்டு விடயங்களை கவனத்திற்கொள்ள வேண்டும். ஒன்று – மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இவர்கள் கடன் பெறவேண்டும். அதற்காக எமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சர்வதேச வலைப்பின்னல் ஒன்றுக்குள் நாம் செல்ல வேண்டும். இரண்டு – நீண்டகால திட்டங்களின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான பொருளாதார திட்டம் அவசியமானதாகும்.

சிறிய – சிறிய முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக இலங்கையின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு கீழ் வரும் மத்திய வங்கியினாலோ அல்லது முதலீட்டுச் சபையினாலோ இதனைச் செய்ய முடியாது. உள்ளூராட்சி சபைகளாலும் இதனை செய்ய முடியாது. ஆனால், இப்போதிருக்கும் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு இதற்கான அதிகாரத்தைக் கொடுக்க முடியும். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி ஏனைய மாகாணங்களிலும் இதனைச் செய்ய முடியும். புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளின் மூலமாக பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பைச் செய்ய முடியும். இதற்கு உறுதியான ஒரு நிலை வேண்டும். அவ்வாறு முதலீடுகளைச் செய்பவர்களுக்கு நம்பிக்கையிருக்கக்கூடிய வகையில் அரசின் செயற்பாடுகள் இருக்க வேண்டும்.

ராஜபக்ச அரசாங்கம் இதற்கு சாதகமாக இல்லை. ஏனெனில் அவர்கள் மாகண சபைகளுக்கு அதிகாரங்களைக் கொடுப்பதற்கு தயாராகவில்லை. முதலீடுகள், நிதி போன்றவைகளைக் கையாள்வதற்கோ தேவையான அதிகாரங்களை மாகாண சபைகளுக்குக் கொடுக்கவில்லை. இதனைச் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாராகவில்லை என்பதால், ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என நான் நினைக்கிறேன்.

கேள்வி:
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கப்போவதாகச் சொல்லி நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்தார். அது குறித்து உங்கள் கருத்து என்ன? இடைக்கால அரசாங்கம் ஒன்று சாத்தியமானதா?

பதில்:
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச அரசாங்கத்துக்கு போதிய தெளிவில்லை. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அல்லது தங்களுடைய அதிகாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மற்றவர்களைச் சேர்த்துக் கொள்வதுதான் இடைக்கால அரசாங்கம் என அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அல்லது மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் எதிர்ப்பை சமாளிக்க யாரையும் இணைத்துக்கொண்டு செயற்படுவதுதான் இடைக்கால அரசாங்கம் என அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

இடைக்கால அரசாங்கம் என்று சொன்னால், அது அடுத்த தேர்தல் வரையிலானது. அரசியலமைப்பின்படி அடுத்த தேர்தல் அடுத்த வருடத்தில்தான் நடத்தப்பட வேண்டும். அல்லது, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைக்கலாம். ஆனால், இன்றைய நிலையில் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்குச் செல்வதன் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது. இடைக்கால அரசாங்கம் என்பது அனைவரது ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு – பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இலக்காகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம். எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தால் அவர் தேர்தல் ஒன்றை இலக்காகக் கொண்டவராகவே செயற்படுகின்றார். ஜே.வி.பி. போன்றனவும் இந்த நிலைமைக்குப் பொறுப்பெடுக்கத் தயாராகவில்லை. அவர்கள் எப்போதும் எதிர்ப்பு அரசியல் நடத்தியே பழக்கப்பட்டவர்கள். மாற்று அல்லது நிழல் அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள். இது மிகவும் மோசமான ஒரு நிலை.

இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமானால், ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும். அந்த நிலையில் பாராளுமன்றத்தினால் ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்படலாம். ஜனாதிபதி பதவி விலகிக்கொண்டு – பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற – பொறுப்பெடுக்கக்கூடிய ஒருவரை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்து அவரது தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கலாம். அதன்மூலம் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முயற்சிக்கலாம். இவ்வாறான ஒரு இடைக்கால அரசின் காலத்தில் புதிய அரசியல்யாப்பு ஒன்றை உருவாக்கலாம்.

இந்த இடைக்கால அரசாங்கம் என்பது வெளிநாடுகளை – ஓரளவுக்கு எமக்கு உதவி செய்யக்கூடிய நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், நாளையோ நாளை மறுதினமோ இந்தப் பிரச்சினை தீர்க்கப்படப் போவதில்லை. அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி இந்த நிலைமைகளில் இருந்து மீள்வதற்கான திட்டமிடலுக்கு இந்தக் காலகட்டம் உதவலாம்.

Exit mobile version