Home செய்திகள் இலங்கையில் பொருளாதார நெருக்கடி: பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி

இலங்கையின் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடியினையடுத்து  இடம் பெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (07) கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

இனவாதத்தால் நாட்டை நாசமாக்கியது போதும், எமது சிறார்களுக்காய் இலங்கையை பாதுகாப்போம், லோன் லீசிங் செலுத்த முடியாது நிவாரணம் வழங்கு, 74 வருட அரசியல் சாபத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் போன்ற வாசகங்களை ஏந்தியும் “ஹோ ஹோம் ஹோட்டா“ போன்ற வாசகத்தை ஏந்தியும் கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்த போராட்டத்தில் மக்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,அரசாங்கத்தை பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கபில களுப்பானவின் தலைமையில் திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் இன்று (7) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  ஒன்று இடம் பெற்றது.

அதே நேரம் ஜனாதிபதி கோட்டபாய மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (07 )  முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘கோட்டபாய பதவி விலகு, இந்த அரசாங்கம் வேண்டாம், அமெரிக்காவுக்கு ஓடுங்கள், எங்களை வாழவிடு’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களையும் எழுப்பியதுடன் ஜனாதிபதி கோட்டபாய மற்றும் சகோதரர்களான மஹிந்த, பசில் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

அத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு எதிராக ஹட்டன் கொட்டகலை நகர வர்த்தகர்கள் சங்கத்தினர்  அனைத்துக் கடைகளையும் மூடி கறுப்புக்கொடி ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (7) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Exit mobile version