Tamil News
Home செய்திகள் திலீபனை நினைவுகூர்வதுஎப்படி பயங்கரவாதமாகும்?

திலீபனை நினைவுகூர்வதுஎப்படி பயங்கரவாதமாகும்?

திலீபனை நினைவுகூர்வது, எப்படி பயங்கரவாதமாகும்? எனக் கேள்வி எழுப்பிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஜே.ஆர். பொதுமன்னிப்பு வழங்கியது அரசுக்கு தெரியாதா என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்த அரசாங்கம் தடை விதித்த நிலையில், இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆயுத இயக்கங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அதன் பின்னரே, தியாக தீபம் திலீபன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சா வழியில் உணவு ஒறுப்பு போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். எனவே திலீபனை நினைவுகூர்வது எப்படிப் பயங்கரவாதமாகும்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இப்போது பயங்கரவாதச் சாயம் பூசப்படுகின்றது. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஆட்சியிலிருப்பவர்கள் எப்போதும் தூக்கும் ஆயுதம்தான் ‘பயங்கரவாதம்’. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தியாக தீபம் திலீபனை பொது வெளியில், யாரும் இடையூறின்றி, நல்லிணக்கத்துக்கு குந்தகமில்லாமல் நினைவுகூர்ந்து வந்தனர்.

2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொலிஸார் இதற்கு நீதிமன்றம் ஊடாகத் தடை கோரிய போதும் அதற்கு மன்று மறுப்புத் தெரிவித்திருந்தது. இப்போது ராஜபக்சக்களின் யுகம். தமிழர்களை மிதித்து அடிமைகளாக வைத்திருப்பது அவர்களின் நோக்கம். அதற்காக எதுவும் செய்வார்கள். நினைவுகூரல் என்பது எங்களின் மரபுரிமை சார்ந்தது. அதனைச் செய்வதற்குக் கூட அவர்களின் அனுமதியில் நாங்கள் தங்கியிருக்கவேண்டியிருக்கின்றது.

பொதுமன்னிப்பு

இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி அந்த உடன்பாட்டுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை பலாலி இராணுவ முகாமில் வைத்து, இந்திய, இலங்கை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த ஜெனரல் சேபால ஆட்டிக, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிரதிநிதியாக இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். சகல போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கடிதத்தை, அந்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கையளிப்பில் பங்கேற்றிருந்த யோகியிடம் அவர் வழங்கியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பிலிருந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்கிய பின்னரே, தியாக தீபம் திலீபன் தனது உணவு ஒறுப்புப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பித்தார். அவரது 5 அம்சக் கோரிக்கைகளில் தனி நாட்டை வலியுறுத்தும் எவையும் இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில், அவர் செப்ரெம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.
இப்படியான நிலையில் தியாக தீபம் திலீபனை அரசு எவ்வாறு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்று முத்திரை குத்த முடியும். அவரை நினைவுகூர்வதை பயங்கரவாதச் செயற்பாடு என்று, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடு என்று எப்படிக் கூறமுடியும். இன்று ராஜபக்ச அரசில் அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, தியாக தீபம் திலீபன் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த போது நேரில் வந்து பார்வையிட்டிருந்தார்.

திலீபனை நினைவுகூர்வது ஒருபோதும் பயங்கரவாதமாகாது. அரசு அதை உணர்ந்து கொள்ளவேண்டும். வெறுமனே தமிர்களை வஞ்சிப்பதற்காகவே ‘பயங்கரவாத’ கோசத்தை ராஜபக்ச அரசு தூக்கிப் பிடிக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் உள்ளிட்ட சகலரும் உய்த்தறிந்து உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஒற்றுமை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப் பெரிய மாற்றம் நடந்தேறியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தை உயிர்நாடியாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓர் புள்ளியில் இணைந்துள்ளன.

ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தமிழரசியலில் பிரிவுகளால் தமிழ் மக்கள் வெந்து வெதும்பி வெறுத்துபோயிருந்த சூழலில், இந்த ஒற்றுமை என்பது புதியதொரு ஒளிக்கீற்றாய் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த ஒற்றுமை இன்னமும் வலுப்படவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் இதயத்தில் இருத்திக் கொள்ளவேண்டும்.

இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்கு, கட்சிகளைப் பிளவுபடுத்தி அதில் வெற்றிகாணும் தென்னிலங்கை அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிகளை முன்னெடுப்பார்கள். தமிழ் கட்சிகள் அவதானமாகச் செயற்படவேண்டும்.

அரசே பொறுப்பு

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ச அரசு மிரண்டுபோயுள்ளது. அதனால்தான் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய, நினைவேந்தலுக்கான தடையை அரசு விதிக்கவில்லை. அங்குள்ள நீதிமன்றங்களே விதித்துள்ளன என்று கூறுகின்றார். அவர் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். நீதிமன்றங்களில் நினைவேந்தலுக்கான தடையைக் கோரியது பொலிஸார், அவர்கள் அரசின் ஓர் அங்கம். பொலிஸார் ஊடாக நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளைப் பெற்றுவிட்டு, அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஹெகலிய முற்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version