Tamil News
Home செய்திகள் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்ட தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை-மனோ கணேசன்

பயன்படுத்தப்படாத காணிகளை தோட்ட தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை-மனோ கணேசன்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு, விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனோ கணேசன்  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வேண்டுகோளையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என சபையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன்  அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள கஷ்டங்கள் தொடர்பில், நான் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தேன்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்போது பெரும் நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.நாளொன்றுக்கு அவர்கள் ஒரு நேர உணவையே உண்கின்றனர். இத்தகைய நிலையை கருத்திற் கொண்டு பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை பயிர் செய்கைகளுக்காக அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அவர்கள் தமக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் அதன் பிரதிபலன்களை வழங்குவார்கள் என்றும் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார். இதன்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பிரதமர்: பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு தோட்டங்களில் காணப்படும் பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்துக்காக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடித மூலம் மனோ கணேசன் எம்பி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த விடயம் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம். விவசாய அமைச்சரும் அதற்கு இணக்கம் தெரிவித்தார். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், விவசாய அமைச்சர் ஆகியோர் மலையக பகுதிகளில் உள்ள எம்.பிக்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் குறிப்பிட்டிருந்தேன். நாங்கள் அதனை மனோ கணேசனின் திட்டம் என்றே கூறலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Exit mobile version