Tamil News
Home செய்திகள் சாந்தன் மருத்துவமனையில் அனுமதி – திருச்சியில் தீவிர சிகிச்சை

சாந்தன் மருத்துவமனையில் அனுமதி – திருச்சியில் தீவிர சிகிச்சை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன், உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி அரச மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 54 வயதான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தனுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன், சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கடந்த 32 வருடங்களாக தனது தாயாரைப் பார்க்கவில்லை எனவும் அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புவதாகவும் ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளது.

Exit mobile version