Home செய்திகள் தமிழ் அரசியல் கைதி ஒருவரின் வழக்கு விசாரணைக்கு வருகின்றது

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் வழக்கு விசாரணைக்கு வருகின்றது

கைதிகள் தமிழ் அரசியல் கைதி ஒருவரின் வழக்கு விசாரணைக்கு வருகின்றதுகடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்தன் என்பவரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கனகரத்தினம் ஆதித்தன் 12 ஆண்டுகளாக பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் கீழ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் அரசியல் கைதியாவார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் அவர்களின் மகனான ஆதித்தன் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையில் ஐந்து நாட்களுக்கு  நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களினால் கையாளப் பட்டு வரும் இந்த வழக்கிற்கான விசாரணை குறித்த அரச சாட்சியங்களை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இஸ்ஸதீன் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் மீதான வழக்கின் மேலதிக விசாரணைக்கு பல தவணைகள் வழங்கப் பட்டுள்ள தாகவும் சாட்சிகள் மன்றில் சமுகமளிக் காததாலும் கடந்த ஆண்டில் இருந்து கோவிட் 19 காரணமாக வழக்கு தொடர்ச்சியாக பிற்போடப் பட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கான திகதியிடும்படி ஜனாதிபதி சட்டத்தரணி மன்றுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அரச சாட்சிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டு மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 19,22,26,27,28 ஆம் திகதிகளுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version