Tamil News
Home செய்திகள் கச்சத்தீவில் புத்தர் சிலை-தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு-தோழர் தியாகு

கச்சத்தீவில் புத்தர் சிலை-தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு-தோழர் தியாகு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் வீட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை வைத்துள்ளார்கள்.

“இது தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பே ஆகும். கச்சத்தீவில் ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுக்க வழியில்லை. ஏனென்றால் அது காலங்காலமாவே ஆளரவமற்ற தீவு. எனவே அங்கு கொண்டுபோய் வைக்கிறார்கள்.  இது தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பே ஆகும். கச்சத்தீவில் ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுக்க வழியில்லை. ஏனென்றால் அது காலங்காலமாவே ஆளரவமற்ற தீவு. எனவே அங்கு கொண்டுபோய் வைக்கிறார்கள் என தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார். அச் செவியின் முழு வடிவம்….

கேள்வி  –  1:

கச்சத்தீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

இது சிங்கள அரசின் கட்டமைப்பியல் இனவழிப்பின் பாற்பட்ட ஒரு நடவடிக்கையே எனபதில் ஐயமில்லை. தொல்லியல் திணைக்களத்தைப் பயன்படுத்தி இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த நாடாக – சிங்கள பௌத்த நாடாக – காட்டும் முயற்சியில் சிங்களப் பேரினவாத அரசு ஈடுபட்டுள்ளது. இது தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பே ஆகும். கச்சத்தீவில் ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுக்க வழியில்லை. ஏனென்றால் அது காலங்காலமாவே ஆளரவமற்ற தீவு. எனவே அங்கு கொண்டுபோய் வைக்கிறார்கள்.

இளைப்பாறவும் வலை காயப் போடவும் கச்சத்தீவில் கரையொதுங்கும் மீனவ மக்கள் கிறித்துவர்கள் அல்லது சமயம் கருதாமல் கிறித்துவை வழிபடக் கூடியவர்கள் என்பதால்தான் அங்கு அந்தோணியார் கோயில் அமைந்தது. மீனவர்களில் ஒரு பகுதியினர் கிறித்தவர்கள் அல்ல என்றாலும் அந்தோணியார் கோயிலையோ அங்கு நடக்கும் திருவிழாவையோ அவர்கள் தங்களுக்கு அயன்மைப்பட்டதாகக் கருதியதில்லை. எனவே சிங்களக் கடற்படையினரின் வழிபாட்டுக்கென புத்தர் சிலை வைக்கப்படுவதாகச் சொல்வதை ஏற்க முடியாது.

அல்லது கச்சத் தீவில் நிலையான கடற்படைத் தளம் அமைப்பதற்கான வெள்ளோட்டம்தான் புத்தர் சிலையா? என்ற ஐயமும் எழுகிறது.

கேள்வி – 2:

இந்த விவகாரத்தில் ஏன் இந்தியத் தளத்தில் அல்லது  தமிழக அரசியல் தலைவர்கள்  எவரும் கண்டனங்கள்   ஏதும் தெரிவிக்கவில்லை?

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் என்பதே உண்மை. பா.ம.க. தலைவர் இராமதாஸ் உடனடியாகவே கண்டனம் தெரிவித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. மற்றப் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள செய்தி உங்கள் கவனத்துக்கு வரவில்லை போலும். நானும் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்திலும் எங்கள் ‘ஆபெல் – நீதியின் பாதை’ உரையாடல் நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசியுள்ளோம். இந்தக் கண்டனங்கள் போதிய அளவு கவனம் பெறவில்லை எனபது மெய்தான். காரணம் இது மீனவர்களின் சிக்கலாக மட்டுமே பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசிய உரிமைச் சிக்கலாகப் பார்க்கப்படவில்லை. தமிழ்நாட்டின் தேசிய இன உரிமைச் சிக்கலாக இதனை அணுகும் போக்கு ஈழத் தமிழ்த் தலைவர்களிடமும் ஊடகங்களிடமும் இருக்கிறதா?

நல்லது. தமிழ் மக்கள் மீது இந்திய அரசு நடத்தும் ஒடுக்குமுறை குறித்துத் தாயகத்திலும் புலம் பெயர் தமிழுலகிலும் தமிழீழத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுண்டா? இந்திய அரசு 2019ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்த போது அதை எதிர்த்துத் தமிழகமும் இந்தியாவும் போராடிக் கொண்டிருந்த போது, அதில் ஈழத் தமிழ் ஏதிலியர் நலனும் தொடர்பு கொண்டிருந்தாலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தவிர தமிழீழ மக்கள் சார்பில் யாருமே வாய்திறக்கவில்லையே, ஏன்? தமிழீழம் குறித்துத் தமிழகம் கவலைப்படுவது போலவே, தமிழகம் குறித்தும் தமிழீழமும் புரிந்து கவலைப்படுவதுதான் முறை. சரிதானே?

கேள்வி – 3:கடற்படையின் இந்த செயற்பாடு இலங்கை இந்திய உறவுகளில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?

எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்திய வல்லரசு புவிசார் அரசியல் நோக்கில் சிங்களத்தைத் தன் பிடியில் வைத்துக் கொள்வதைத்தான் முக்கியமாகக் கருதுகிறது. கச்சத் தீவுக்கு சீனக் கடற்படை வந்தால் அப்போதுதான் இந்திய அரசு குதிக்கும். அதுவரை அந்தோனியார் கோயிலை இடித்தால் கூட கவலைப்படாது. புத்தர் யார்? வருண சாதியை எதிர்த்த புத்தராக இருந்தால் அச்சப்படலாம். இந்த சிங்கள புத்தர் விஷ்ணுவின் இன்னோர் அவதாரம்தானே? இராசபட்சர்கள் நடத்திய இனக் கொலைக்கு ஆசி வழங்கிய புத்தர்தானே?

கேள்வி – 4:

கச்சத்தீவு இலங்கை அரசுக்கு சொந்தமானது என்பதால் இந்தியா இதில் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என நினைக்கின்றீர்களா? தமிழக மீனவ மக்கள் கூட கண்டனங்களை தெரிவிக்கவில்லையே?

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்? இலங்கைக்குச் சொந்தமா? இந்தியாவுக்குச் சொந்தமா? இரு நாடுகளுக்கும் சொந்தமில்லை, அது தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்பதை அடித்துச் சொல்ல வேண்டும். ஏடறிந்த வரலாற்றில் இரமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாய் இருந்த கச்சத்தீவு தமிழ் மக்களுக்கே சொந்தமானது. அதனை இந்தியாவுக்குக் கொடுத்தது யார்? தனக்குச் சொந்தமில்லாத ஒன்றை இந்தியா எப்படி இலங்கைக்குக் கொடுக்க முடியும்? கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்க இந்திரா யார்? அதை பெற்றுக் கொள்ள சிறிமா யார்?

கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்து கச்ச்த் தீவை மீட்டுத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியத்தின் கோரிக்கை. இதற்குத் தமிழீழ மக்கள் ஆதரவு தர வேண்டும்.

Exit mobile version