Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலியா: கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை வெளியேற்றுவதற்கான மசோதா

அவுஸ்திரேலியா: கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை வெளியேற்றுவதற்கான மசோதா

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிற்கான இடங்களாக செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் உள்ள சுமார் 160 அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு மாற்றுவதற்கான சட்ட மசோதா ஒன்று அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன் மீதான வாக்கெடுப்பு வரும் மார்ச் 8ம் திகதி அவுஸ்திரேலிய மேலவையில் நடக்கவிருக்கும் நிலையில், இம்மசோதாவுக்கு ஆதரவாக தொழிற்கட்சி அரசாங்கம் வாக்களிக்க வேண்டும் என தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் வலியுறுத்தியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி 6ம் திகதி பசுமை கட்சியின் மேலவை உறுப்பினர் நிக் மெக்கிம் சமர்பித்த புலம்பெயர்வு திருத்த (பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்) மசோதா அவுஸ்திரேலிய மேலவை நிலைக்குழுவின் முன்னிலையில் இருக்கிறது.

சட்ட, அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான அந்நிலைக்குழு வரும் மார்ச் 7ம் திகதி இந்த சட்ட திருத்தம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும். அதைத் தொடர்ந்து மேலவையில் அது குறித்து விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் பல ஆண்டுகளை உள்ள அகதிகளை அவசர மருத்துவ உதவிக்கு வெளியேற்றுவதற்கான எந்த தெளிவான, நியாயமான அல்லது மனிதாபிமான ரீதியிலான செயல் முறையும் நடைமுறையில் இல்லை. இந்த நிச்சயத்தன்மையற்ற நிலையைப் போக்குவதற்கு இம்மசோதா உதவும் என தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version