Tamil News
Home செய்திகள் பதில் ஜனாதிபதி, இடைக்கால ஜனாதிபதி தெரிவு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

பதில் ஜனாதிபதி, இடைக்கால ஜனாதிபதி தெரிவு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவி விலகல், பதில் ஜனாதிபதி மற்றும் இடைக்கால ஜனாதிபதி தெரிவினை தாமதப்படுத்தாது துரிதமாக செயற்படுத்தும் பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு உண்டு.

கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த சகல கட்சி தலைவர்களும் பொது இணக்கப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும்.

பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே பொருளாதாரம்,அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை ,ஜனாதிபதி செயலகம் நாட்டின் தேசிய சொத்துக்கள்.பொது மக்கள் அவற்றின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். வன்முறை செயற்பாடுகள் எப்பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது,மாறாக நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து தற்போது அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடியை தோற்றுவித்து முழு நாட்டின் ஸ்தீரத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிரான போராட்டம் ஜனநாயக ரீதியிலான அமைதி வழியாக காணப்பட்ட போதிலும் போராட்டத்தில் இடம்பெற்ற ஒருசில சம்பவங்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கனவாக காணப்பட்டன. போராட்டகாரர்கள்,பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை வெறுக்கத்தக்கதாகும்.

ஊடகவியலாளர்கள் மீது மிலேட்சத்தனமான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இத்தாக்குதல் இயல்பானதாக இடம்பெற்றது என குறிப்பிட முடியாது.ஊடகவியலாளர்களின் உரிமை பாதுகாக்கப்படுவதுடன்,ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீக்கிரைக்கியாக்கப்பட்டுள்ளமை முற்றிலும் வெறுக்கத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயக கொள்கைக்கு எதிரானது.போராட்டகாரர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதமரின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

வன்முறை சம்பவங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை மேலும் தீவிரப்படுத்தும்.ஜனநாயக ரீதியிலான போராட்டம் வன்முறையாக தோற்றமடையும் போது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை தொடர்பில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெறும்.தற்போதைய நிலையில் முழு உலகமும் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்துகிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமர தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி பதவி விலகுவாராயின் அவர் பதவி விலகல் தொடர்பிலான கடிதத்தை,தனது உத்தியோகப்பூர்வ கைச்சாத்திடலுடன் சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஜனாதிபதி பதவி வெற்றிடமானதை தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக பிரதமர் தெரிவு செய்யப்பட வேண்டும்.பதில் ஜனாதிபதியாக பிரதமர் பதவியேற்ற முடியாத நிலை காணப்படுமாயின் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி ஒருவர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும். இலங்கை அரசியல் வரலாற்றில் 1993ஆம் ஆண்டு மே மாதம் 01ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அப்போதைய பிரதமர் டி.பி விஜயதுங்க ஒருசில மணித்தியாலங்களுக்குள் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 1993.05.07ஆம் திகதி பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார்.இத்தன்மையினை தற்போது செயற்படுத்தலாம்.

பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு ஒருமாத காலத்திற்குள் பாராளுமன்றத்தின் ஊடாக தகுதியான ஒருவர் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குப்பற்றலுடனான வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கு அதிகமாக அதாவது  சபாநாயகரை தவிர்த்து 224 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளில் 113 வாக்குகளை பெறுபவர் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் பதவி விலகல்,பதில் ஜனாதிபதி,இடைக்கால ஜனாதிபதி தெரிவினை தாமதப்படுத்தாது துரிதமாக செயற்படுத்தும் பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு உண்டு.கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த சகல தலைவர்களும் பொது இணக்கப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ள பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.இவ்விரு கட்டடங்களும் நாட்டு மக்களின் பழமையான சொத்து,ஆகவே அவற்றிற்கு சேதம் ஏற்படுத்தாது அதன் கௌரவத்தை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு உண்டு என்றார்.

Exit mobile version