Tamil News
Home செய்திகள் பொது மன்னிப்பு இடைநிறுத்தம்: துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

பொது மன்னிப்பு இடைநிறுத்தம்: துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தால் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், துமிந்த சில்வாவிற்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

ஹிருணிக்கா பிரேமச்சந்திர, அவரின் தாயார் சுமன பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கஸாலி ஹூசைன் ஆகியோர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பிற்கு எதிராக 3 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, கொழும்பு புறநகர் பகுதியான கொலன்னாவை – கொட்டிகாவத்தை பகுதியில், இரு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.

அதில், இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகராகவும் இருந்த பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்.

அப்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா காயமடைந்திருந்தார். பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலைக்கு துமிந்த சில்வாவே காரணம் என்கிற குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. அவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2021ம் ஆண்டு ஜுன் மாதம் 24ம் தேதி, பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version