Home ஆய்வுகள் ‘நம் தாயகத்தில் நாம் சுதந்திரமாக வாழ வேண்டும்’ – பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான...

‘நம் தாயகத்தில் நாம் சுதந்திரமாக வாழ வேண்டும்’ – பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்… – மட்டு.நகரான்

127 Views

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனங்கள், தமிழ் பேசும் இனங்களை தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழவிடுங்கள் போன்ற பல செய்திகளை கிழக்கில் ஆரம்பமான ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யான தமிழர் எழுச்சிப் போராட்டம் இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லியுள்ளது.

இந்த எழுச்சிப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும் தமிழ்த்தேசிய மக்களுக்கும், அது சார்ந்தவர்களுக்கும் பல்வேறு செய்திகளை வழங்கியுள்ளது.

இந்த எழுச்சிப்பேரணி, கிழக்கின் தமிழ் தேசியத்தின் மீதான பற்றும், கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளையும் வடகிழக்கு இணைந்த தாயகம் என்பதன் முழுமையான அர்த்தத்தினையும் இன்று அனைவருக்கும் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு முதன்மைப்படுத்திய தமிழர்களின் செயற்பாடுகள் கிழக்கினை பிரித்தாளும் சக்திகளுக்கு சாதக நிலைமையினை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த போராட்டத்தின் மூலம் அந்த சக்திகளின் சூழ்ச்சிகளெலாம் இன்று தகர்த்தெறியப்பட்டுள்ளது.

 கடந்த 03ஆம் திகதி பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் வடகிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுவந்த பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தியதாக முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் வடகிழக்கில் உள்ள சிவில் அமைப்புகள் இணைந்து வடகிழக்கில் உள்ள முக்கிய பல பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில்கீழ் உள்ளவற்றினை தமது கோரிக்கையாக வெளியிட்டது,

யுத்தம் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளில் வடகிழக்கை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வட கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப் பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு  முன்னெடுத்து வருகின்றது.

 இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்தமயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.

 இதன் மூலம் வடக்கில் குருந்தூர்மலை ஐயனார் கோயில், வெடுக்குநாறிமலை சிவன் கோயில், நிலாவரை, மற்றும் கிழக்கில் கன்னியா பிள்ளையார் கோயில், குசனார் முருகன் ஆலயம், வேற்றுச்சேனை சித்தி விநாயகர் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் தமது பாரம்பரிய, கலாசார, சமய, வழிபாடுகளை செய்ய முடியாதவாறு ஆலயங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு, அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் நடை பெறுகின்றன. மேலும் வடகிழக்கில் உள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலய ங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வரும் ஊடகவியலாளர்களும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தப்படுவதுடன், அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அத்தோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை காணிகளை அபகரித்து, சிங்களக் குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பில் உள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால்தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற் கொண்டு வருகின்றனர்.

இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களை புதைக்கும்  செயற்பாடுகளை இல்லாமல் செய்து, ஜனாசாக்களை எரியூட்டி வருகின்றனர். இதற்கு எதிராக போராடும் முஸ்லிம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் பலதரப்பட்ட இஸ்லாமிய மக்களை பயங்கரவாத தடைச் சட்டத் தினை பயன்படுத்தி தடுத்து வைத்துள்ளனர். இதே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பல வருட ங்களாக தடுத்து வைத்துள்ளனர்.

இதேபோன்று சிறைகளில் விசாரணைகள் இன்றி தமிழ் அரசியல் கைதிகளாக பலர் உள்ளனர். ஆனால் பல குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம், இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய  தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருகிறது.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோ ரின் உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வருடக்கணக்கில் தொடர்ச்சியாக  போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நீதியை வழங்காது அரசாங்கம் ஏமாற்றி வருகிறது.

அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது  அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்திய இந்த போராட்டம் பொத்துவிலில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது, இந்த போராட்டத்தினை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த போராட்டம் எழுச்சிபெற்றுவிடக்கூடாது என அர சாங்கம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகள், தடை கள் துடைத்தெறியப்பட்டுள்ளன.

இதேபோன்று பிரதேசவாதத்தினை மூலதனமாக கொண்டு அரசியல் மேற்கொண்டுவரும் கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு செருப்படியை இந்த பொத்துவில் தொடக்கம் பொலி
கண்டி வரையான தமிழர் எழுச்சிப்பேரணி பறைசாற்றியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் புதிய அரசாங்கம் கடமையேற்ற காலம் தொடக்கம் தமிழர்களின் குரல்வளையினை நசுக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கட்சிகள் மீது வெறுப்புக்கொண்டு அபிவிருத்தி அரசியலை நோக்கிச் சென்றவர்களைக்கூட இன்றும் மீண்டும் தமிழ் தேசிய அரசியலுக்குள் கொண்டு வந்துள்ளது.

இதேபோன்று தமிழ்த் தேசிய அரசியல் என்றால் வடக்கு தலைமையகம் என்பது போன்று செயற்பட்ட அரசியல்வாதிகளை கிழக்கு மாகாணத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது இந்த பேரணி. அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய முக்கியத்துவத்தினையும் இன்று கிழக்கு தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருகோணமலை வரையில் நடைபெற்ற பேரணியானது யுத்தத்திற்கு பின்னர் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுச்சியாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.

யுத்த காலத்திலும் ஏற்படாத எழுச்சியாக தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்கள் தாயகத் தினை அங்கீகரித்து இன்று தமிழர்களுடன் கைகோர்க்க வைக்கும் நிலையினை இன்று பெரும்பான்மை அரசியல் சக்திகள் ஏற்படுத்தியுள்ளனர். முஸ்லிம்கள் மீது தமிழர்களுக்கு சந்தேகங்கள் பல இருந்தாலும், இன்று அவர்களுக்கு கைகொடுக்கும் தரப்பாக தமிழர்கள் மட்டுமேயுள்ளது நிதர்சனமா கும். இன்றைய காலம் என்பது வடகிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம் அல்லது தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை இரு இனங்களும் இணைந்து பிரகடனப்படுத்தும் நிலையேற்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் பிரித்தாளும் தந்திரத்தில் கட்டுப்பட்டிருந்த முஸ்லிம் இனம் இன்று சுதா கரித்துக் கொண்டு தமிழர்களுடன் கைகோர்க்க வந்துள்ளதானது, எதிர்காலத்தில் தமிழர் தாயகத்திற்கு ஒரு சிறந்த முன்னோட்டமாகவும் நோக்க
வேண்டியுள்ளது.

இன்றைய காலத்தில் வடகிழக்கினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் தாயகத்தினை அடைய வேண்டுமானால், அதற்கு முஸ்லிம்களின் ஆதரவினையும் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கான சந்தர்ப்பம் பல வழிகளில் எம்மை நோக்கி வருகின்ற நிலையில், அவற்றினை புத்திசாலித்தனமாக கையாண்டு ஒருங்கிணைக்க வேண்டியது சிவில் சமூகத்தின் தார்மீக பொறுப்பாகும்.

இன்று அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து சிவில் சமூக அமைப்புகள், மதத்தலைவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டுக்குள் எவ்வித முரண்பாடுகள் ஏற்பாட்டாலும் அவைகள் தீர்க்கப்பட்டு இந்த கூட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்போது எதிர் காலத்தில் வடகிழக்கில் பாரிய ஒருங்கிணைந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன.

 

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் இருந்த நீண்டகால ஏக்கம் தீர்க்கும் ஆரம்பப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு தாயகத்தில் என்றும் கிழக்கு முதன்மையானது என்பது கிழக்கு மக்கள் மத்தியில் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. கிழக்கு தமிழர்களை புறக்கணித்து எந்த தமிழ் தேசிய அரசியலும் செய்யமுடியாது என்பதை வடக்கு அரசியல் தலைமைகளுக்கு கிழக்கு மக்கள் மீண்டும் உணர வைத்துள்ளனர்.

 

எதிர்காலத்தில் வடகிழக்கு இணைந்த அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். கிழக்கிலும் தமிழ் தேசிய கட்சிகள் தலைமைத்துவங்களை வழங்க வேண்டும். கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் இனிவரும் காலங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சிப் பேரணியானது பல்வேறு விடயங்களை இன்று தமிழர் தேசத்தில் வெளிக்காட்டியுள்ளது. அவற்றினை உணர்ந்து எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version