Tamil News
Home உலகச் செய்திகள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உலகநாடுகளில் பள்ளி மாணவர்கள்...

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உலகநாடுகளில் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் தொடங்கியது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

நியூயார்க்கில் நடைபெறும் புவி வெப்பமயமாதலுக்கு எதிர் நடவடிக்கைகள் தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 10 லட்சம் பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கிலும் நடைபெறும் இந்த பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் பல மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்பமயமாதலுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு வாரம் தோறும் இதற்காக போராட்டம் நடத்தி வந்தார்.

சமூக வலைதளங்கள் மூலம் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

மேலும், இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, 2017இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் நிலவிய வெப்பநிலையைவிட இரண்டு டிகிரி செல்ஸியஸ் (2.0C) வெப்பத்துக்கு மிகாமல், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த 200க்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version