Tamil News
Home செய்திகள் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ் நாட்டில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ் நாட்டில் தஞ்சம்

கிளிநொச்சியில் இருந்து  தமிழர்கள் 5 பேர் இன்று  தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்த பாரதி டிஸ், அவரது தாய் முனியம்மா, அவரது இரண்டு மகன்கள் ஒரு மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீன்பிடி படகில் புறப்பட்டு இன்று (திங்கட்கிழமை ) அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

இதையடுத்து இராமேஸ்வரம் மரைன் காவல்துறை இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன் இலங்கையில் வாழ வழி இன்றி தமிழகத்திற்கு அகதிகளாக  தஞ்சமடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version