Tamil News
Home செய்திகள் உகண்டா பாடசாலை ஒன்றில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் படுகொலை

உகண்டா பாடசாலை ஒன்றில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் படுகொலை

உகண்டா பாடசாலை ஒன்றில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து அல்லது கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலின் பின் குறைந்தது ஆறு பேரை கிளர்ச்சியாளர்கள் கொங்கோ நாட்டு எல்லையை கடந்து கடத்திச் சென்றுள்ளனர். இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் தொடர்புபட்ட ஜனநாயகப் படைகளின் கூட்டணி என்ற கிளர்ச்சிக் குழுவே எல்லை நகரான ம்பொன்ட்வேயில் இருக்கும் லுஹுபிரியா இடைநிலை பாடசாலையில் தாக்குதல் நடத்தி இருப்பதாக நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது. இந்தக் கிளர்ச்சிக் குழு பதற்றம் கொண்ட கொங்கோ நாட்டின் கிழக்கை தளமாகக் கொண்டு பல ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மாணவர்கள் தங்கும் விடுதி மீது கிளர்ச்சியாளர்கள் தீ வைத்ததால் சில மாணவர்கள் தீக் காயத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் மற்றவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு அல்லது கத்தியால் வெட்டப்பட்டிருப்பதாகவும் ம்பொன்ட்வே லுப்ரிஹா மேயர் செலெவெஸ்ட் மபொசே தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரிகள் துப்பாக்கி மற்றும் கத்திகளோடு தமது விடுதிக்கு வந்து வெளியில் இருந்து கண்மூடித்தனமாக சுட்டதை அடுத்து அனைவரும் கட்டில் அடியில் ஒளிந்துகொண்டதாக 16 வயது மும்பரே எட்கர் டிடோ என்ற மாணவன் குறிப்பிட்டுள்ளான். ‘அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, நாம் உள்ளே இருக்கும்போதே விடுதிக்கு தீ வைத்துவிட்டு பெண்கள் விடுதிக்கு சென்றனர்’ என்று அந்த மாணவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கிளர்ச்சிக் குழுவுக்கு எதிராக உகண்டா மற்றும் கொங்கோ இராணுவம் கூட்டு நடவடிக்கைகளை அண்மைய ஆண்டுகளில் நடத்தி வரும் நிலையில் இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கிளர்ச்சியாளர்களால் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் உகண்டா எல்லைக்கு அருகில் இருக்கும் கொங்கோ கிராமம் ஒன்றில் இந்தக் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 100க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உகண்டாவுக்கு தப்பியோடிய நிலையில் மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர்.

Exit mobile version