Tamil News
Home செய்திகள் கிழக்கு மாகாணத்துக்கு 75 ஆயிரம் சீனத் தடுப்பூசிகள் – நாளை முதல் வழங்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்துக்கு 75 ஆயிரம் சீனத் தடுப்பூசிகள் – நாளை முதல் வழங்க நடவடிக்கை

இலங்கைக்குக் கிடைத்த நான்கு லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளில் கிழக்கு மாகாணத்திற்கு 75ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.

தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்கீழ் கொரோனாப் பாதிப்பினடிப்படையில் நாட்டிலுள்ள ஏழு மாகாணங்களுக்கு இந்த 4லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரஅமைச்சின் சுகாதாரசேவைப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

அதன்படி கிழக்கு வடமத்திய ஊவா மற்றும் மத்திய மாகாணத்திற்கு தலா 75ஆயிரம் தடுப்பூசிகளும் தெற்கு வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணத்திற்கு தலா 50ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை பிராந்தியங்களுக்கு இந்த 75ஆயிரம் தடுப்பூசிகளும் தலா 25ஆயிரம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு குறைவாக உள்ள கல்முனைப் பிராந்தியத்திற்கு அடுத்தகட்ட வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படவிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்:

குறித்த 75ஆயிரம் கொரோன தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கின்றன. செவ்வாயன்று தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. .
கிழக்கில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பிரதேசங்கள் காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில் கல்முனைப்பிராந்தியம் குறைந்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளது தெரிந்ததே.

எனவே முதலில் பாதிக்கப்பட்ட முதல் 3 பிரதேசங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அடுத்தகட்டமாக கல்முனைப்பிராந்தியத்திற்கும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மூன்று தொகுதியினராக வகைப்படுத்தி இத் தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டங்களை வகுத்துள்ளோம். இம்மாகாணத்தில் உள்ள தொற்றா நோயாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
அத்தோடு அரச ஊழியர்கள். கர்ப்பிணிகள் முன்னணி செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கும் இத்தடுப்பூசியினை வழங்க உத்தேசித்துள்ளோம்.என்றார்.

Exit mobile version