Tamil News
Home உலகச் செய்திகள் 2036 ஆம் ஆண்டு வரையான புட்டினின் நியமனத்திற்கு எதிராகப் போராட்டம்

2036 ஆம் ஆண்டு வரையான புட்டினின் நியமனத்திற்கு எதிராகப் போராட்டம்

ரஷ்ய அதிபராகப் பதவி வகிக்கும் விளாடிமிர் புட்டின் 2036ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகிப்பதற்குரிய உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தார். இந்த நியமனத்திற்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புட்டினின் பதவி நீடிப்பு நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக் கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலத்தில் ‘NO’ என்று எழுதப்பட்ட முகக் கவசத்தை அணிந்திருந்த போராட்டக்காரர்கள், புட்டின் பதவியை இராஜினாமா செய்யும்படி முழக்கமிட்டனர் என்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பொலிசார் கைது செய்ததாகவும்  செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் அதிபர் பதவி வகிப்பவர் தொடர்ந்து இரண்டு தடவைகளுக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இருந்தும் புட்டின் செல்வாக்கு மிக்கவராக உள்ளதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் அண்மையில் நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்டது.

மக்கள் விருப்பத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு ஒரு வாரம் நடைபெற்றது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக புட்டின் 2036ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர விருப்பம் தெரிவித்திருந்தனர். 21.6%பேர் இதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்தே 2036 ஆம் ஆண்டுவரை அதிபராக இருக்கும் உத்தரவில் தற்போதைய அதிபர் புட்டின் கையொப்பமிட்டிருந்தார்.

Exit mobile version