Tamil News
Home செய்திகள் வைத்தியர் சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு ஆளுநர் எதிர்ப்பு

வைத்தியர் சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு ஆளுநர் எதிர்ப்பு

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றும் த.சத்தியமூர்த்தியின் பதவிகள் தொடர்பாக வடக்கு ஆளுநர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இரண்டு பதவிகளையும் இவர் வகிப்பதற்கு அநேக அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மத்திய அரசு, மாகாண நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி என விமர்சித்திருந்தனர்.

வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதினார். தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா ஆளுநருடன் பேச்சு நடத்தியிருந்தார்.

சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவியை மட்டும் கவனிக்குமாறு ஆளுநர் சத்தியமூர்த்திக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை தேவனேசன் கவனிப்பார் என்றும் ஆளுநரால் சத்தியமூர்த்திக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் எழுத்துமூலமாக இந்த அறிவித்தலை தந்தால் மட்டுமே தான் ஏற்றுக் கொள்வதாக ஆளுநரிடம் தான் தெரிவித்ததாக சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version