Tamil News
Home செய்திகள் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை திடீர் இடைநிறுத்தம்?

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை திடீர் இடைநிறுத்தம்?

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக கட்டாரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தரவிருந்த ஒரு தொகுதி இலங்கையர்களை ( 273 பேர்)அழைத்து வரும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இவ்வாறு ரத்துச் செய்யப்பட்ட விமானத்தின் ஊடாக இலங்கைக்கு வருகைத் தர எதிர்பார்த்திருந்த இலங்கையர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுக்குமாறு அந்நாட்டிற்கான இலங்கை பதில் தூதுவருக்கு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்கதெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளான 5420 இலங்கையர்கள் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், கட்டார், குவைட், மாலைத்தீவு, இந்தோனேஷியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்கள் கடந்த சில தினங்களாகவே அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குவைட் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கடந்த சில தினங்களாகவே உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இவ்வாறு குவைட் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் இறுதியாக உயிரிழந்தமையையும் சுகாதார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது. குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 462 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 120 பேருக்கு வைரஸ் இருப்பது நேற்றிரவுவரை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. இந்நிலையில் குறைவான வசதிகளுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களை நடத்திசெல்வதில் பாரிய சிரமங்களை அரசாங்கம் எதிர்நோக்கி வருவதாகவும் அறியமுடிகின்றது.

இதனால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து ஒரு தொகுதியினர் வெளியேறியதை அடுத்தே மற்றுமொரு தொகுதியை நாட்டிற்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையை அரசாங்கம் தற்போது எதிர்நோக்கியுள்ளது. அதனால் இலங்கையில் தனிமைப்படுத்தல் நிறைவு பெற்று ஒரு தொகுதியினர் வெளியேறியதன் பின்னர் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version