Home செய்திகள் ரஷ்ய கூலிப் படையில் இறந்த இலங்கையா்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை – சரத் வீரசேகர

ரஷ்ய கூலிப் படையில் இறந்த இலங்கையா்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை – சரத் வீரசேகர

sarath weerasekara ரஷ்ய கூலிப் படையில் இறந்த இலங்கையா்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை - சரத் வீரசேகரரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக சேர்ந்த இலங்கையர்களில் பலா் உயிரிழந்துள்ளார்கள். அல்லது காணாமல் போயுள்ளார்கள். இவர்களின் உடல்கள் கூட இதுவரை கிடைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், “இலங்கை இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே மோசடியாளர்களினால் இவர்கள் ரஷ்ய இராணுவத்தில் கூலிப் படையினராக இணைக்கப்பட்டுள்ளார்கள். ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக சேர்ந்த இலங்கையர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள். இவர்களின் உடல்கள் கூட இதுவரை கிடைக்கவில்லை” என்று சுட்டிக்காட்டினாா்.

“நேபாளம்,இந்தியா ஆகிய நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை ரஷ்யாவுக்கு கூலிப் படையினராக அனுப்ப போவதில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. ஆகவே இலங்கை அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ரஷ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ரஷ்ய அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்” என்றும் சரத் வீரசேகர தெரிவித்தாா்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவா், “30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பொருளாதார பாதிப்பின் காரணமாகவே ரஷ்யாவுக்கு சென்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஆகவே இவர்கள் நாட்டுக்காக ஆற்றிய சேவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினாா்.

“அரகலய போராட்டத்தின் போது கட்சி ஆதரவாளர்கள் பேரவாவியில் தள்ளப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார்கள். பஸ்களும், அரசியல்வாதிகளின் வீடுகளும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறை தீவிரமடைந்த போது பாதுகாப்பு தரப்பினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சரத் வீரசேகர வலியுறுத்தினாா்.

Exit mobile version