Tamil News
Home செய்திகள் யாழ். மக்களின் காணிகளை வழங்க 1200 மில்லியன் ரூபாவை கோரும் இராணுவம்

யாழ். மக்களின் காணிகளை வழங்க 1200 மில்லியன் ரூபாவை கோரும் இராணுவம்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஒருபகுதி காணியை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபா தேவை எனவும் அரசாங்கம் அதனை வழங்கவில்லை எனவும் இராணுவத்தினர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளனர்.

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 16.08 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இராணுவத்தினர் இத்தகவலை தெரிவித்தனர்.

கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலாலி வீதியின் கிழக்குப் புறமாக உள்ள மிக வளமான விவசாய நிலங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன், குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அதனை வலியுறுத்தியுள்ளதுடன், வல்லை அராலி வீதி மற்றும் மயிலிட்டியில் 3 கிராம சேவகர்கள் பிரிவுகள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் இராணுவத்தின் இந்த நடவடிக்கை பொருளாதார மேம்பாட்டிற்கு தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேற்படி காணிகளை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கத்திடம் கோரியிருந்தோம் ஆனால் அந்த நிதியை அரசாங்கம் தரவில்லை என்றார்.

Exit mobile version