Tamil News
Home செய்திகள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கின்றனர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கின்றனர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட, ஐந்து கட்சிளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிலைப்பாட்டை இன்று பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஐந்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், ஐந்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தனித்தனியாக அறிவித்துள்ளன. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவான நிலைப்பாடொன்றை மேற்கொள்ளும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பலகட்ட சந்திப்புகள் இடம்பெற்றன.

இதனையடுத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்த்து தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய 5 கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு – கிழக்கு பல்கலை மாணவர்களின் ஒருங்கிணைப்பில், 13 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்தனர்.

எனினும் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான மூன்று வேட்பாளர்களும் முன்வரவில்லை. அதன் பின்னர் விரும்பியவர்களுக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ என அனைத்து தமிழ்க் கட்சிகளும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன. பின்னர் இறுதியாக இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version