Tamil News
Home செய்திகள் உண்ணாவிரதத்தை கைவிட்ட நளினி, முருகன் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

உண்ணாவிரதத்தை கைவிட்ட நளினி, முருகன் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி வேலூர் தனிச்சிறையில் 10 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நளினி நேற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். ஆனால் முருகன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 18 நாட்களாக தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

வேலூர் மத்திய சிறையில் இருந்த முருகனின் சிறை அறையில் கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கைத்தொலைபேசியும், சிம் அட்டையும் கைப்பற்றியதாகக் கூறப்பட்டதுடன், அவர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் இரத்துச் செய்யப்பட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை அவரை உறவினர்கள் சந்திப்பதும் நிறுத்தப்பட்டது.

இதனை எதிர்த்து முருகன் கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதேவேளை முருகனை தனிச்சிறையிலிருந்து வெளியில் கொண்டு வரவேண்டும் என்று கோரி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினியும் கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

தொடர் உண்ணாவிரதத்தால் நளினி, முருகன் இருவரதும் உடல் நலன்கள் பாதிக்கப்பட்டது. கடந்தஞாயிற்றுக் கிழமை  அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அத்துடன் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதேவேளை நேற்று (06) சிறைச்சாலை அதிகாரிகள் நளினியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அவரின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் இது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனையடுத்து நளினி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை முருகனுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கோரியதுடன், தனது கணவரும் உண்ணாவிரதத்தைக் கைவிடக் கூற வேண்டும் என்றும், அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை அவரின் கைப்பட கடிதம் எழுதித்தர வேண்டும் என்றும் நளினி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நளினி உண்ணாவிரதத்தை கைவிட்ட விபரத்தை முருகனுக்கு தெரிவித்ததாகவும், அவரையும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரியுள்ளனர்.

இருந்தாலும், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிட மறுத்ததுடன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவரது உடல்நலம் நன்றாக இருப்பதாகக் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version