Tamil News
Home செய்திகள் யாழ். பலாலியிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானப் பயணம்

யாழ். பலாலியிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானப் பயணம்

யாழ். பலாலியிலிருந்து இந்தியா தமிழ்நாட்டின் திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கு இந்தியா இணக்கம் கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாவும் இந்தியா 300 மில்லியன் ரூபாவையும் செலவு செய்யவுள்ளன. தற்போது ஓடுபாதை சீர் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், சிவில் விமான சேவைகள் நிறுவனத்தினால், அனைத்துலக விமான நிலையமாக இயக்கப்படவுள்ளது. இருந்தாலும் சிறிலங்கா விமானப்படையே தொடர்ந்தும் விமான நிலையத்தை நிர்வகிக்கும் என அறிய முடிகின்றது.

தற்போது 200 பயணிகளைக் கையாளக்கூடிய ஒரேயொரு முனையம் மாத்திரமே உள்ளது. குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் நெருக்கமான ஆசனங்களைக் கொண்ட சிறிய விமானங்களின் மூலம் இந்தியாவின் சில நகரங்களுக்கே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது இங்கிருந்து விமானப்படையின் C – 130, AN – 32, MA – 60  போன்ற விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தினால் 15,400 வணிக விசாக்களும், 121,000 சுற்றுலா விசாக்களும் வழங்கப்பட்டுள்ளன  என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version